Home இந்தியா பாகிஸ்தானிலிருந்து அஞ்சல் வழி பொட்டலங்களுக்கு இந்தியா தடை!

பாகிஸ்தானிலிருந்து அஞ்சல் வழி பொட்டலங்களுக்கு இந்தியா தடை!

99
0
SHARE
Ad

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பதும், முன்னாள் பாகிஸ்தான் இராணுவ வீரர் முக்கியப் பங்காற்றியிருப்பதும் தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் போர் மூளும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடமும் பாகிஸ்தான் தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள், அஞ்சல்கள்  மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தபால் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது. ஏற்கனவே, பாகிஸ்தான் தனது நாட்டின் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்குத் தடைவிதித்திருந்தது.

அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, இந்திய இராணுவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

450 கிலோ மீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.