பெட்டாலிங் ஜெயா, மே 25 – இன்று பெட்டாலிங் ஜெயா, அம்கோர்ப் மால் வணிக வளாகம் முன்பு உள்ள திடலில் திட்டமிட்டபடி நடைபெறும் மக்கள் கூட்டணி ஏற்பாட்டிலான ‘கறுப்பு பேரணி 505’ கூட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியுள்ளனர்.
பிற்பகல் முதலே, காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, கறுப்பு ஆடைகளில் மக்கள் குழுமத் தொடங்கி விட்டனர்.
இந்த கூட்டம் சட்டவிரோதமானது என்றும், காரணம் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி 10 நாட்களுக்கு முன்னதாக காவல் துறையினருக்கு முன் அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் கூறியுள்ளார்.
எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது காவல் துறையின் நடவடிக்கை பாயும் என்றும் அகமட் சாஹிட் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் மாலை 7 மணிக்குள் சுமார் 4,000 பேர் அங்கு கூடியுள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.
கூட்டத்தில் உரையாற்றியவர்களில் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, மற்றும் பல சமூக, மாணவர் தலைவர்களும் அடங்குவர்.
போக்குவரத்து காவல் துறையினர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி அனுப்பினர்.
காவல் துறையின் FRU எனப்படும் சட்டவிரோதப் பேரணிகளை அடக்கும் பிரிவினரின் வாகனங்கள் அந்த வட்டாரத்தில் காணப்பட்டாலும், இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் எந்தவித முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)