திருச்சி, மே. 29- குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சுக்கிரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க முதல்வர் ஜெயலலிதா நாளை மாலை திருச்சி வருகிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி கோவிலின் சுற்றுப்புற பகுதிகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி கோவில் வட்டாரத்தில் கேட்டபோது, எண் கணிதப்படி நேற்று (28-ந்தேதி) குருப்பெயர்ச்சி நடந்துள்ளது.
பஞ்சாங்கப்படி நாளை தான் (30-ந்தேதி) குருப்பெயர்ச்சி நடக்கிறது. குருப் பெயர்ச்சியும், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமையும் ஒரே நாளில் வருகிறது.
இந்த குருப்பெயர்ச்சியால் சிம்மராசி, மகம் நட்சத்திரத்திற்கு சிறப்பான யோகங்கள் கூடி வருவதாலும், அன்றைய தினம் சுக்கிரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் சிறப்புகளும் கிடைக்கும் என்பதாலும் முதல்வர் ஜெயலலிதா நாளை ரெங்க நாதரை தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிற்பகலில் திருச்சி வரும் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவிலுக்கு செல்கிறார்.
விமான நிலையத்தில் அவரை அமைச்சர் மற்றும் கலெக்டர் வரவேற்கிறார்கள். முதல்வர் வருகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று சென்னையில் இருந்து முதல்வரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்துகிறார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வருகிற 3-ந்தேதி நடைபெறும் அரசு விழாவிலும் கலந்து கொள்ள வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.