கிள்ளான், மே 29 – சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியிலுக்கு, நேற்று அம்மாநில சுல்தான் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் 10 பேரும் நாளை இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.
இந்நிலையில் இன்று காலை இஸ்தானா ஆலம் ஷா அரண்மனையில் நடந்த பதவி நிகழ்வு ஒத்திகையில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் 6 பேர் மலாய்காரர்களாக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் கூறியிருப்பதால், ஜசெக மற்றும் பிகேஆருக்கு தலா மூன்று இடங்களும், பாஸ் கட்சிக்கு நான்கு இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் ஜசெகவிற்கு முன்பு கொடுத்திருந்த வாக்குறுதிப்படி 4 இடங்கள் வழங்கப்படவில்லை என்று பக்காத்தான் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
அவ்வகையில் பாஸ் கட்சி சார்பாக ஹலிமா அலி (சிலாட் கிளாங்), இஸ்கண்டார் அப்துல் சமட் (செம்பாகா), சாலேகான் முஹி (சாபாக்), அகமட் யூனுஸ் கைரி (சிகிஞ்சான்) ஆகிய 4 பேரும், ஜசெக சார்பாக தெங் சாங் கிம் (சுங்கை பினாங்கு), இயன் யோங் ஹியான் வா (ஸ்ரீ கம்பாங்கன்) வி.கணபதிராவ் (கோட்டா ஆலம் ஷா) ஆகிய 3 பேரும் ஆட்சிக்குழுவில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜசெக வைச் சேர்ந்த ஹன்னா இயோப் (சுபாங் ஜெயா) அவைத் தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பிகேஆர் சார்பாக எலிசபெத் வோங் (புக்கிட் லஞ்சான்), ரோஸியா இஸ்மாயில் (பத்து தீகா), தரோயோ அல்வி (செமந்தா) ஆகிய 3 பேர் ஆட்சிக்குழுவில் இடம்பெறுவார்கள். மேலும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நிக் நஸ்மி நிக் அஹ்மட் துணை அவைத் தலைவராகப் பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.
பிகேஆர் சார்பாக கடந்த முறை சேவியர் ஜெயக்குமார் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தார் ஆனால் இம்முறை ஜசெக சார்பாக கணபதிராவ் (படம்) நியமனம் செய்யப்பட்டிருப்பதால் சேவியருக்கு இடம் இல்லை என்று கூறப்படுகிறது.