Home அரசியல் “நாடாளுமன்றக் கூட்டத்தில் தடுப்புக் காவல் மரணங்கள் பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்” – உதயகுமார் கோரிக்கை

“நாடாளுமன்றக் கூட்டத்தில் தடுப்புக் காவல் மரணங்கள் பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்” – உதயகுமார் கோரிக்கை

555
0
SHARE
Ad

uthayakumarஜூன் 3 – ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கும் பி.உதயகுமார், அடுத்து தொடங்கப் போகும் புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், காவல் துறை தடுப்புக் காவலில் நிகழும் தொடர் மரணங்கள் குறித்த பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டும், தீர்வு காண வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்காக, நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கும் போது ஓர் அவசரத் தீர்மானம் முன்மொழியப்பட வேண்டும் எனவும், இதற்காக மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உதயகுமார் பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் “இவ்வாறு தடுப்புக் காவலில் மரணத்தை நிகழ்த்துபவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு உடனடியாக சுமத்தப்பட வேண்டும் என அந்த அவசரத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்என்றும் கூறியுள்ளார்.

சுதந்திரமான காவல்துறை மீதான புகார்கள், முறைதவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் அமைப்பது, 5,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தடுப்புக் காவல் கைதிகளுக்கு சட்ட உதவிகள் வழங்குவது, சட்ட உதவி வழக்கறிஞர்களை காவல் நிலையங்களில் நிரந்தரமாக நிறுத்துவது போன்ற அம்சங்களையும் கொண்டு வரப்படும் அவசரத் தீர்மானம் உள்ளடக்கியிருக்க வேண்டும் என உதயகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கூட்டணித் தலைவர்கள் கண்டித்திருந்தால் இப்படி நடக்காது

மக்கள் கூட்டணி தலைவர்கள் மேலும் பகிரங்கமாக தடுப்புக் காவல் மரணங்கள் பற்றி கண்டனம் தெரிவித்திருந்தால் இவ்வாறு மீண்டும், மீண்டும் நடக்காது என்றும் உதயகுமார் குறிப்பிட்டார்.

“11 நாட்களில் 3 மரணங்கள். அனைவரும் இந்தியர்கள். இதைத்தான் அமைப்பு ரீதியான இனவாதம் என நாங்கள் கூறினால், மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிமோ, நாங்கள் இனவாதம் பேசுகின்றோம் என்றும், ஹிண்ட்ராப் பெர்காசாவுக்கு இணையான தீவிரவாத இயக்கம் என்றும் எங்கள் மீதே பாய்கின்றார்”  என்று உதயகுமார் கூறினார்.

அன்வார், லிம் கிட் சியாங், ஹாடி அவாங் ஆகிய மூவரும், தடுப்புக் காவலில் மரணமடைந்த மற்ற கைதிகளான தியோ பெங் ஹோக், அமினுல் ரஷிட் அம்சா ஆகியோரின் மரணங்கள் தொடர்பாக எடுத்த உறுதியான நிலைப்பாட்டைப் போன்று, மற்ற இந்திய மரணங்களையும், இன பேதமின்றி எதிர்த்திருந்தால், இன்றைக்கு நடந்திருப்பதைப் போன்று மூன்று தொடர் மரணங்கள் நிகழ்ந்திருக்காது” என்றும் உதயகுமார் தெரிவித்தார்.