கோலாலம்பூர் – “கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி தேசிய முன்னணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தாலும், அம்னோ காலத்து இனரீதியான கொள்கைகளும், அரசியலும் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதன் காரணமாக அடிமட்டத்தில் இருக்கும் 75 விழுக்காடு ஏழை இந்தியர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே முதலில் இந்த இனரீதியான கொள்கை அரசியலை ஒழித்துக் கட்டுங்கள்” என இந்து உரிமைகளுக்காகப் போராடும் ஹிண்ட்ராப் 2.0 இயக்கத்தின் தலைவரான பி.உதயகுமார் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“கடைநிலை இந்தியர்கள் இன்னும் பிறப்புப் பத்திர, அடையாள அட்டை ஆவணங்கள் தொடர்பிலேயே பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த அடுத்த 100 நாட்களில் 350,000 நாடற்ற மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது நம்பிக்கைக் கூட்டணி. ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியும் என்னவாயிற்று அந்த வாக்குறுதி? இன்னும் அம்னோவின் இனரீதியான அரசியலில் சிக்கியிருப்பதால்தான் இதைச் செய்ய முடியவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பிய உதயகுமார், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரின் ஒரே உத்தரவால் இந்தப் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியும் என்றும் கூறினார்.
இந்து ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்குவீர்
இந்து ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்குவது, இன்னும் இந்து ஆலயங்கள் உடைபடுவது போன்ற விவகாரங்களிலும் நம்பிக்கைக் கூட்டணி மெத்தனம் காட்டி வருகிறது என்ற உதயகுமார் அந்தக் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழிபாட்டுத் தலங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம் பெற்றிருந்தது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
143 ஆண்டுகள் பழமை வாய்ந்த – பாடாங் செராயிலுள்ள – விக்டோரியா தோட்ட மாரியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா மறுக்கப்பட்டு, தற்போது உடைக்கப்படுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற உதாரணத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.
பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா, லுனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருடின், மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப் போதுமான அளவில் உதவவில்லை என உதயகுமார் குற்றம் சாட்டினார்.
நாட்டிலுள்ள பல இந்து மயானங்களுக்கு இன்னும் நிலப்பட்டா மறுக்கப்படுகிறது, அவை எப்போது வேண்டுமானாலும் உடைக்கப்படலாம் எனக் கூறிய உதயகுமார், தமிழ்ப் பள்ளிகளுக்கும் நம்பிக்கைக் கூட்டணி போதுமான மேம்பாடுகளை வழங்கவில்லை என்றார்.
இன்னும் 90 விழுக்காடு தமிழ்ப் பள்ளிகள் அரசாங்க உதவி பெற்ற பள்ளிகளாக மாற்றப்படவில்லை என்றும் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்தியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 14 சட்டமன்றத் தொகுதிகளையும் தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்பதுதான் என்றும் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.