Home நாடு “வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கையால் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழப்பர்” உதயகுமார் எதிர்ப்பு

“வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கையால் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழப்பர்” உதயகுமார் எதிர்ப்பு

938
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அங்கீகாரத்தை வைத்திருக்கும் முதலாளிகள் அந்த அங்கீகாரம் காலாவதியானால் அதற்குப் பதிலாக அதே எண்ணிக்கையில் மாற்று வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிகளுக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுக்கு ஹிண்ட்ராப் 2.0 என்ற இயக்கத்தின் தலைவரான பி.உதயகுமார் (படம்) எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் வேலைகளுக்கு எடுப்பதால் ஏழை இந்தியர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என அவர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தொழிலாளர் பற்றாக்குறையால் தங்களின் வணிகங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்நியத் தொழிலாளர்களைத் தொடர்ந்து பணிகளில் அமர்த்த தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வரும் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் நிறுவனங்களின் சம்மேளனம் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு வரவேற்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் மேலும் பல தொழில்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் மைக்கி கேட்டுக் கொண்டது.

இந்திய மக்கள் தொகையில் அடிமட்ட 75 விழுக்காட்டினர் ஏழ்மை நிலைமையில் இருக்கின்றனர் என்று கூறியுள்ள உதயகுமார், அவர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகளின் வழி வாழ்க்கையில் முன்னேற அந்நியத் தொழிலாளர்களின் படையெடுப்பு தடையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குறைந்த சம்பளத்தில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்துவதை விட உள்நாட்டில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான் முன்னேற்றகரமான நடவடிக்கையாக இருக்கும் என உதயகுமார் தெரிவித்தார்.