Home கலை உலகம் இளையராஜா இசையில் மீண்டும் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இளையராஜா இசையில் மீண்டும் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

1116
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலாவுக்கும் இடையில் நீடித்து வந்த மனக்கசப்பும், சர்ச்சையும் முடிவுக்கு வந்து இருவரும் கட்டியணைத்து தங்களின் மனவிரோதங்களை மறந்திருக்கும் நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி தமிழ்ப்பட இசை இரசிகர்களை வந்தடைந்திருக்கிறது.

இளையராஜா இசையில் ஒரு படத்தில் எஸ்.பி.பாலா பாடியிருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. இளையராஜா இசையில் விஜய் அந்தோணி கதாநாயகனாக நடித்து வரும் ‘தமிழரசன்’ படத்தில் ஏற்கனவே யேசுதாஸ் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை (ஜூன் 1) இளையராஜா இசையில் எஸ்.பி.பாலா மீண்டும் பாடிய அந்த அற்புதக் காட்சி அரங்கேறியிருக்கிறது. கவிஞர் பழனிபாரதி எழுதிய இந்தக் காதல் பாடலை இளையராஜாவின் உத்தரவுகளுக்கு ஏற்ப பாலா பாடி முடித்திருக்கிறார்.

இளையராஜாவின் பிறந்த நாள்

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இன்று ஜூன் 2, இளையராஜாவின் பிறந்த நாளாகும். 1976-ஆம் ஆண்டில் அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த அவருக்கு இன்று 76-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலில் தமிழ் நாட்டையே தனது இசையால் கலக்கிய இளைய ராஜா பின்னர் அகில உலக அளவிலும் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகப் புகழ் பெற்றார்.

இன்று தமிழகத்தின் வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள் அனைத்தும் இளையராஜா குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளையும், அவரது பாடல்களையும், ஒலி, ஒளிபரப்பின.

தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இளையராஜாவுக்குத் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.