Home கலை உலகம் இளையராஜா-எஸ்பிபி – மீண்டும் இணைந்த இசை நட்புகள்

இளையராஜா-எஸ்பிபி – மீண்டும் இணைந்த இசை நட்புகள்

893
0
SHARE
Ad

சென்னை – இசையமைப்பாளர், பாடகர் என்ற அளவில் நீண்டகாலமாக பின்னிப் பிணைந்திருந்த நண்பர்கள் இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்! அவர்களது இசை நட்பில் முகிழ்த்த எண்ணற்ற பாடல்கள் இரசிகர்களைப் பரவசப்படுத்தின.

ஆனால், இருவருமே தமிழ்த் திரையுலகில் காலடி வைத்து புகழ் பெறுவதற்கு முன்பே, மேடைக் கச்சேரிகளில் ஒன்றாகப் பாடி தங்களின் நட்பை வளர்த்துக் கொண்டவர்கள் என்பதும் பலருக்கும் தெரியும்.

மேடையிலேயே பகிரங்கமாக ஒருவரை ஒருவர் ‘வாடா, போடா’ எனக் கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள்.

#TamilSchoolmychoice

ஆனால் இடையில், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் அனுமதி இல்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை எஸ்பிபி பாடினார் என இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் கடிதம் கொடுக்க, இனிமேல் இளையராஜா பாடல்களை மேடையில் பாடமாட்டேன் என அறிவித்தார் எஸ்.பி.பாலா.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் நிலவி வந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜாவுடன் இணைந்து எஸ்.பி.பாலாவும் பங்கேற்கப் போகிறார் என்ற தகவலால் அவர்களது இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதற்கேற்ப, அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் – ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ளும் புகைப்படங்கள் நேற்று திங்கட்கிழமை முதல் சமூக ஊடகங்களில் உலாவரத் தொடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து அவர்களின் இரசிகர்கள் அவர்கள் மீண்டும் இணைந்ததற்கு பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.