பத்துமலை, ஜூன் 3 – அனைத்துலக இந்திய வம்சாவளியினரின் அமைப்பு (Global Organisation of people of Indian Origin) சார்பாக பத்துமலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்திய வம்சாவளியினரின் அனைத்துலக கலைக் கலாச்சார பண்பாட்டுப் பெருவிழா 2013 மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஆடல், பாடல் மற்றும் விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் பலர், இவ்விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதோடு வெளிநாட்டைச் சேர்ந்த பலர் இந்திய மக்களும் இதில் கலந்து கொண்டு ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ம.இ.கா தேசியத் தலைவரும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேல், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்திய வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி பிரிவுக்கு தான் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் ம.இ.காவின் நடப்பு துணையமைச்சரான டாக்டர் சுப்ரமணியத்துடன் தான் பிரதமர் நஜிப்பை சந்தித்த போது, இத்தகவலை நஜிப் உறுதிப்படுத்தியதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.