Home Featured நாடு பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!

பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!

1032
0
SHARE
Ad

palanivel-mic

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அணியினரின் தேசிய நிலையிலான சந்திப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகாவுக்கு வெளியே இருக்கும்  மஇகா கிளைத் தலைவர்கள் சுமார் 100 முதல் 150 பேரும், ஆதரவாளர்களுமாக மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பழனிவேல் கலந்து கொண்டாலும், அவர் உரையாற்றவில்லை. இதன் காரணமாக, தனது ஆதரவாளர்களின் புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு அவர் ஆதரவளிக்கின்றாரா அல்லது அவரது ஆலோசனையுடன்தான் புதிய கட்சி அமைக்கப்படுகிறதா என்பது போன்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.

#TamilSchoolmychoice

இன்றையக் கூட்டத்திற்கு ஜோகூர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

பழனிவேல் அணியின் மற்ற முக்கியத் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் டத்தோ இரமணன், ஏ.கே.இராமலிங்கம், சிவசுப்ரமணியம், டத்தோ ராஜூ, பினாங்கைச் சேர்ந்த டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் ஆகியோருடன் மற்றும் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

எதிர்பார்த்தபடி, டத்தோ எஸ்.சோதிநாதனோ அல்லது அவரது ஆதரவாளர்களோ யாரும் இன்றையக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

“புதிய கட்சி தொடங்குவோம்” – டான்ஸ்ரீ பாலா அறிவிப்பு

Dato S.Balakrishnanஇன்றைய கூட்டத்தின் முடிவில், நிறைவுரை ஆற்றிய டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, தமது அணியினர் புதிய இந்தியர் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். புதிய கட்சியின் பெயர், அதற்கான உறுப்பினர் சேர்ப்பு போன்ற ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதே வேளையில், தாங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் மேல் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்தால், நீதிமன்றப் போராட்டங்களின் வழி மஇகாவுக்குத் திரும்பும் அல்லது அதன் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் டான்ஸ்ரீ பாலா கூறினார்.

அப்படி தீர்ப்பு தங்களுக்கு எதிராக அமைந்தால், புதிய கட்சியைத் தோற்றுவிப்போம் என்றும் பாலா மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பழனிவேல் தரப்பிலிருந்து விலகி டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தை ஏற்று, மஇகாவில் இணையப் போவதாக அறிவித்துள்ள டத்தோ சோதிநாதன் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், பழனிவேல் தரப்பிலிருந்து சோதிநாதன் தவிர்த்து, மற்றொரு குழுவினர், மஇகாவில் இணைவதற்கு டாக்டர் சுப்ரா தரப்புடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மஇகாவில் மீண்டும் இணைவதுதான் தங்களின் நோக்கம் என்றாலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக, சோதிநாதனின் தலைமையில் மஇகாவில் இணைவதற்கு இவர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதன்காரணமாக, இவர்களாகவே, நேரடியாக சுப்ரா தரப்புடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும், பழனிவேல் தரப்பினரின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.