இந்தக் கொண்டாட்டங்களில் பிரதமர் நஜிப் துன் ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றார். இந்தக் கொண்டாட்டங்களை, கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொடக்கி வைத்தார்.
முன்னாள் தலைவர்களுக்கு கௌரவிப்பு
முன்னாள் தலைவர்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் சார்பாக அவர்களின் குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கடந்த கால தேசியத் தலைவர்கள் என்று வரும்போது, தற்போது இருப்பவர்கள் இருவர். டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆகியோரே அந்த இருவராவர்.
இவர்களில் சாமிவேலு நிகழ்ச்சிக்கு வருகை தந்து தனக்கு வழங்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், மஇகாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது 70ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் பழனிவேலு கலந்து கொள்வாரா இல்லையா என்பதுதான்!
70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் தொடர்பாக, அனுப்பப்பட்டு வரும் அழைப்பிதழ்களில் கடந்த காலத் தலைவர்களின் புகைப்படங்களின் வரிசையில், பழனிவேலுவின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
பழனிவேலுவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட வேண்டும், கடந்த கால தேசியத் தலைவர் என்ற முறையில் அவருக்குரிய மரியாதைகள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது வழங்கப்பட வேண்டும் என்பதில் மஇகா தலைமைத்துவம் உறுதியாக இருக்கின்றது என மஇகா தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பழனிவேலுவுக்கு நேரடி அழைப்பை வழங்க தேவமணிக்குப் பொறுப்பு
பழனிவேல், மஇகாவின் 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, ஒரு முன்னாள் தலைவர் என்ற முறையில் தனக்கு வழங்கப்படும் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு, நடப்பு மஇகா தலைமைத்துவமுடனான தனது கருத்துவேறுபாடுகளையும், தலைமைத்துவப் போராட்டங்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு மஇகா வட்டாரங்களிலும், பழனிவேலுவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலும் வலுத்து வருகின்றது.