கோலாலம்பூர், ஜூன் 10 – பேராக் மாநில ஆட்சிக்குழுவில் ம.இ.காவைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இடங்களை அவசரப்பட்டு கட்சி நிராகரித்துவிடக்கூடாது காரணம் ம.சீ.ச வைப் போல் ம.இ.கா ஒன்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த கட்சி அல்ல என்று ம.இ.கா வியூக இயக்குனர் வேள்பாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேள்பாரி மேலும் கூறுகையில் “ ம.இ.கா ஒன்றும் ம.சீ.ச போல் பணக்கார கட்சிஅல்ல. சீன சமூகம் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருப்பதோடு, அதற்கு உதவப் பல அரசு சார்பற்ற இயக்கங்களும் உள்ளன. அதனால் தான் ம.சீ.ச அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் ம.இ.காவால் அப்படி ஒரு முடிவை எடுத்துவிட முடியாது.
அதோடு சட்டமன்ற தலைவர் பதவியால் சமூகத்திற்கு எந்த விதமான நன்மையும் கிடையாது. அப்பதவியில் இருப்பவருக்கு மட்டுமே நன்மை கிடைக்கும். எனவே சட்டமன்ற தலைவர் பதவியைக் காரணம் காட்டி மஇகா தலைவர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மற்றும் நம் இந்திய சமூகத்திற்கும் கிடைக்கும் நன்மைகளை கிடைக்காமல் செய்துவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
பேரா மாநில சட்டமன்ற தலைவர் பதவி ம.இ.கா வைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் பேராக் மாநில அரசாங்க பதவிகள் எதையும் ம.இ.கா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கடந்த சனிக்கிழமை ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பேராக் மாநில சட்டமன்ற தலைவர் நியமனம் தொடர்பில் ம.இ.கா தலைவர் பழனிவேல் விடுத்திருக்கும் அறிக்கை, அம்மாநில மந்திரி பெசார் ஸம்ரியை மிரட்டுவது போல் உள்ளதாக தேசிய முன்னணியைச் சேர்ந்த பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் சங்கத் தலைவர் முகம்மட் கூசய்ரி அப்துல் தாலிப் தெரிவித்திருந்தார்.