கோல திரங்கானு, ஜூன் 27 – கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. ரஹ்மான் மொஹ்தாரின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான காலியிட அறிவிப்பை, திரங்கானு சபாநாயகர் ஸூபிர் எம்போங் இன்று காலை 10 மணியளவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, திரங்கானு மாநில தேர்தல் ஆணையத் தலைவர் ஃபாக்ருல் ராஸி அப்துல் வாகாப் இன்னும் 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் திரங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணி 17 தொகுதிகளையும், மக்கள் கூட்டணி 15 தொகுதிகளையும் கைப்பற்றியது.
இந்நிலையில் நேற்று தேசிய முன்னணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. ரஹ்மான் மொஹ்தார் (படம்) காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
13 வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நடத்தப்படவிருக்கும் முதல் இடைத்தேர்தலான இதில், தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்குமிடையே கடுமையான போட்டி நிலவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெல்லும் பட்சத்தில், இரண்டு அரசியல் அணிகளும் தலா 16 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று சரிசமமான பலத்தோடு திகழும்.
இதனால் அரசியல் நெருக்கடியும் , ஒட்டு மொத்த மாநிலத்திற்கே மறு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலையும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.