Home அரசியல் “கோல பெசுட் இடைத்தேர்தல் வெற்றியால் நஜிப் நிம்மதி பெருமூச்சு – பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியது”...

“கோல பெசுட் இடைத்தேர்தல் வெற்றியால் நஜிப் நிம்மதி பெருமூச்சு – பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியது” – அரசியல் வல்லுநர் கருத்து

711
0
SHARE
Ad

470x275x3f79ea1ab750ce054747791f80964ad5.jpg.pagespeed.ic.V4Iwx6hKvF

கோலாலம்பூர், ஜூலை 25 – நடந்து முடிந்த கோல பெசுட் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி பிரதமர் நஜிப்பை நிம்மதியடையச்செய்துள்ளது. இதன் மூலம் வருகிற அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கட்சித் தேர்தலில் அவரது பதவிக்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய சவால் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அரசியல் வல்லுநர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், மே 5 பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு நஜிப் தான் காரணம் என்று கூறி கட்சியின் முன்னாள் தலைவர்கள் சிலர் அவரது தலைவர் பதவி குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கெபாங்சான் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் அரசியல் வல்லுநரான சம்சுல் அடாபி மாமட் இது குறித்து கருத்துரைக்கையில், “ஒருவேளை அம்னோவின் பெரும்பான்மை குறைந்திருந்தால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருக்கும். கோல பெசுட்  மிக முக்கியமான தொகுதி. தேசிய முன்னணி அதில் வெற்றியடைந்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த கோல பெசுட் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளர் தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் 8288 வாக்குகள் பெற்று பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் அவரை எதித்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளரான அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் 5696 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதன் மூலம் 2592 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, திரங்காணு மாநிலத்தில் 17 சட்டமன்றத் தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சியைத் தொடருகிறது.

இருப்பினும், தேர்தல் மறுசீரமைப்பு குழுவான பெர்சே 2.0, தேசிய முன்னணி இந்த தொகுதியைக் கைப்பற்றுவதற்காக கிட்டத்தட்ட அரை பில்லியன் ரிங்கிட் அளவிற்கான திட்டங்களை அறிவித்திருப்பதாகவும், அது ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா 19,000 ரிங்கிட் கொடுக்கப்பட்டதற்குச் சமமானது என்றும் கூறியுள்ளது.

இதன் எதிரொலியாக, தேசிய முன்னணி தங்களது 12 வது நாள் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 467.12 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது என்றும், நடைபெற்ற இடைத்தேர்தல்களிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று பாஸ் கட்சியும் கூறுயுள்ளது.

எதிர்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரும், வல்லுநருமான லிம் டெக் கீ இடைத்தேர்தல் குறித்து கருத்து கூறுகையில், “இடைத்தேர்தலுக்காக இவ்வளவு  செலவு செய்திருக்கிறார்கள் என்றால், நஜிப்புக்கு அது எத்தனை முக்கியமாக இருந்திருக்கும் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். ஒருவேளை நஜிப் தோல்வியடைந்திருந்தால் இந்நேரம் அவரது பதவிக்கு மிகுந்த நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.