கோல பெசுட், ஜூலை 25 – நேற்று நடைபெற்ற கோல பெசுட் இடைத்தேர்தலில், தான் தோல்வியுற்றிருந்தாலும் இறுதி வெற்றி மக்களுக்கே கிடைத்துள்ளது என்று பாஸ் கட்சி வேட்பாளர் அஸ்லான் (என்ற) எண்டுட் யூசோப் கூறியுள்ளார்.
“எங்களுக்கு இந்த தோல்வி ஒன்றும் ஆச்சர்யத்தையோ, மனவருத்தத்தையோ தரவில்லை. நான் தோல்வி கண்டாலும் கோல பெசுட் மக்களுக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது. தேசிய முன்னணி கிட்டத்தட்ட 400 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட திட்டங்களை கோல பெசுட் தொகுதி மக்களுக்காக அறிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அவரது தோல்விக்கான காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனக்கும், மலேசிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டி போன்று இருந்ததாக அவர் பதிலளித்தார்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய முன்னணி வேட்பாளர் தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக, அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் அத்தொகுதிக்கு நேரடியாக சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியிடப்பட்ட இடைத்தேர்தல் முடிவின் படி, தெங்கு ஜைஹான் செகு அப்துல் ரஹ்மான் 8288 வாக்குகள் பெற்று பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்லான் 5696 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.