கோலாலம்பூர், ஜூலை 1 – திரங்கானு மாநிலம் கோல பெசுட் இடைத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றியடைந்து தொங்கு நிலை ஏற்படும் பட்சத்தில், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கும், மாநில அரசாங்கத்தை நியமிப்பதற்கும் அம்மாநில சுல்தானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சட்டமன்ற சபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று அரசியல் வல்லுநர் அப்துல் அஜீஸ் பேரி தெரிவித்துள்ளார்.
அதோடு, மாநில சட்டமன்ற சபாநாயகரான முகமட் ஸூபிர் எம்போங் அவைக்கு வெளியில் இருந்து நியமிக்கப்பட்டவர் என்றும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அல்ல என்றும் அஜீஸ் பேரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்டமன்ற பணிகளை கவனிப்பதும், நிரந்தர ஆணைகளை அமலாக்குவதும் தான் சபாநாயகரின் பணி. தொங்கு நிலை ஏற்பட்டால் அவரால் மாநில அரசாங்கத்தை நியமிக்க முடியாது என்று அஜீஸ் பேரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோலபெசுட் இடைதேர்தல் தொடர்பாக, அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அகமட் மஸ்லான் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், எதிர்கட்சியினர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, இரு அணியினரும் 16 – 16 என்ற சமமான தொகுதிகளை பெறும் பட்சத்தில், மாநில சபாநாயகர் முகமட் ஸூபிர் எம்போங்கையும் சேர்த்தால் தேசிய முன்னணி 17, மக்கள் கூட்டணி 16 என்றாகிவிடும்.
எனவே தேசிய முன்னணி தொடர்ந்து திரங்கானுவில் ஆட்சி செய்யும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.