Home அரசியல் ம.இ.கா. விவகாரங்களில் தலையிடுவதை சாமிவேலு நிறுத்திக் கொள்ள வேண்டும் – பினாங்கு ம.இ.கா பொருளாளர் டத்தோ...

ம.இ.கா. விவகாரங்களில் தலையிடுவதை சாமிவேலு நிறுத்திக் கொள்ள வேண்டும் – பினாங்கு ம.இ.கா பொருளாளர் டத்தோ ஹென்ரி அறைகூவல்

798
0
SHARE
Ad

DATO' HENRY BENEDICTஜூலை 10 – கடந்த 31 வருடங்களாக ம.இ.காவின் தலைவராக இருந்து கொண்டு தனது இஷ்டம் போல் ஆட்சி நடத்திய மதிப்பிற்குரிய டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் அவரது வயதுக்கும், அவர் வகிக்கும் தூதர் என்ற பொறுப்பு வாய்ந்த பதவிக்கும் மரியாதை கொடுத்து, ம.இ.காவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென ம.இ.கா பாகான் தொகுதியின் தலைவரும், ம.இ.கா பினாங்கு மாநிலப் பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் (படம்) அறைகூவல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

டத்தோ ஹென்ரி பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் கீழ்க்காணுமாறு மேலும் கூறியுள்ளார்:-

“சாமிவேலுவின் முறை தவறிய, மற்றவர்களையும், கட்சிக்காரர்களையும் மதிக்காத, சர்வாதிகாரத்தனமான தலைமைத்துவத்தால்தான் ம.இ.கா என்ற ஆலமரம் அரசியல் ரீதியாக சீர்குலைந்தது. நூற்றுக் கணக்கான ம.இ.கா கிளைகள் மூடப்பட்டு, அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் அவல நிலை ஏற்பட்டது.

பல தொகுதிக் காங்கிரசுகள் அவருடைய இஷ்டம் போல் மூடப்பட்டன. எனது கிளை இருக்கும், பினாங்கு மாநிலத்தின் ம.இ.கா பாகான் தொகுதியே 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சாமிவேலுவால் எந்தவித காரணமும் இன்றி முடக்கப்பட்டது, மூடி வைக்கப்பட்டது.

அவருக்கு வேண்டாதவர்களை – அவர்கள் எவ்வளவோ திறமையானவர்களாக இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்கினார். டான்ஸ்ரீ சுப்ரா, டத்தோ பத்மநாபன், டான்ஸ்ரீ பண்டிதன் போன்ற அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள்.

சாமிவேலு தலைமைத்துவத்தினால்தான் ஹிண்ட்ராப் என்ற இயக்கமே முளைத்தது. இந்தியர்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 2008 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கடுமையான தோல்வியைச் சந்தித்ததற்கும், இந்தியர்களின் வாக்குகளை இழந்ததற்கும் சாமிவேலுதான் காரணம் என்பதையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏன் சாமிவேலுவே தோற்றதால்தான் தேசியத் தலைவர் பதவியை விட்டு விலகினார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது..

சாமிவேலுவால் வாங்க முடியாத இரண்டு அமைச்சர் பதவிகள்

ஆனால், இப்போது அமைதியாக சென்று கொண்டிருக்கும் ம.இ.கா. மறுபடியும் அவரது காலம் போல் தலைமைத்துவப் போராட்டத்தால் சிக்கி மீண்டும் சீரழிய வேண்டும் என்பதுதான் சாமிவேலுவின் விருப்பமா?

சாமிவேலு 31ஆண்டுகள் முழு அமைச்சராக, கட்சியின் தேசியத் தலைவராக இருந்தாலும் இந்திய சமுதாயத்தின் உரிமையான இரண்டு அமைச்சர்கள் பதவிகளை இறுதிவரை வாங்கவே இல்லை.

அதைவிட முக்கியம், அப்படியே அரசாங்கம் தர தயாராக இருந்தாலும், அவரது தலைமைத்துவத்தில் மற்றொரு தலைவரை முழு அமைச்சராக அவர் அனுமதித்ததே இல்லை.

ஆனால், பழனிவேலுவோ, வெகு சுலபமாக தேசியத் தலைவர் என்ற முறையில் டாக்டர் சுப்ரமணியத்தின் அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்க முடியும். ஆனால், சுப்ரமணியத்தையும் முழு அமைச்சராக செயல்பட பழனிவேல் வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்.

இன்றைக்கு, கட்சியின் தேசியத் தலைவரும், துணைத் தலைவரும் இரண்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று அரசாங்கத்திற்கும், கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கும் நல்ல முறையில் சேவையாற்றி வருகின்றார்கள்.

ஆனால், இதைக் கெடுக்கும் விதமாக, இரண்டு பேருக்கும் இடையில் தற்போது சிண்டு முடித்து, சண்டை போட வைத்து, அவர்களையும் தலைமைத்துவ போராட்டத்திற்குள் சிக்க வைத்து கட்சியை அவரது காலத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும் “நல்ல” காரியத்தில் சாமிவேலு இறங்கியிருக்கின்றார்.

அதிலும், சாமிவேலுவைப் போல் முப்பதாண்டுகள் இருப்பேன் என்று முழக்கமிடாமல், இன்னும் மூன்றாண்டுகள்தான் இருப்பேன் என்றும் அதன்பின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்வேன் என்றும் பணிவுடன் பழனிவேல் கூறிய பின்னரும், தலைமைத்துவ போட்டி தவிர்க்க முடியாதது என்று எல்லோருக்கும் முந்திக்கொண்டு சாமிவேலு கூறியிருக்கின்றார்.

கட்சியில் போட்டியை உருவாக்க எல்லோரையும் விட சாமிவேலுதான் அதிக ஆர்வமாக இருக்கின்றார் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

பழனிவேலுவைக் கொண்டு வந்ததே சாமிவேலுதான்!

ஆனால், இன்றைக்கு தேசியத் தலைவராக இருக்கும் பழனிவேலுவை அரசியலுக்குக் கொண்டு வந்து ம.இ.கா வில் அறிமுகப்படுத்தி, வளர்த்ததே சாமிவேலுதான்!

2006ஆம் ஆண்டில், அப்போதைக்கு 25 ஆண்டுகள் கட்சியில் துணைத் தலைவராக இருந்து அனுபவம் பெற்றிருந்த டத்தோ (இப்போது டான்ஸ்ரீ) சுப்ரா எனக்கு ஏற்ற துணைத் தலைவரில்லை. பழனிவேலுதான் எனக்கேற்ற துணைத் தலைவர் என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து சுப்ராவை சாமிவேலு தோற்கடித்தார்.

அதன்பின்னர், மூன்றாண்டுகள் கழித்து, 2009இல் மீண்டும் பழனிவேலுதான் துணைத் தலைவராக வர வேண்டும் என்று பிரச்சாரம் செய்து மீண்டும் சுப்ராவைத் தோற்கடித்து பழனிவேலுவைத் துணைத் தலைவராக்கினார்.

அதன்பின்னர், 2010ஆம் ஆண்டில் பதவி விலகும்போது கூட, எனக்குப் பிறகு, பழனிவேலு சிறந்த முறையில் கட்சியை வழிநடத்துவார் அந்த அளவுக்கு நான் அவருக்கு பயிற்சி கொடுத்து வளர்த்திருக்கின்றேன் என்று எல்லா பேட்டிகளிலும் சாமிவேலு கூறினார்.

இத்தனை ஆண்டுகள் பழனிவேலுவைக் கூடவே வைத்திருந்த சாமிவேலுவுக்கு பழனிவேலுவின் குணாதிசயங்கள் இன்றைக்கு மட்டும்  தெரிய வந்தது போல இப்போது பழனிவேலுவை சாமிவேலு குறை சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்.

அன்றைக்கு சாமிவேலு கைகாட்டிய பழனிவேல் இன்றைக்கு சரியில்லை என்றால், இனி பழனிவேலுவுக்கு அடுத்த தலைவர் என்று சாமிவேலு காட்டுபவர் மட்டும் சரியான தலைவராக இருப்பார் என்று எப்படி நாம் எடுத்துக் கொள்வது?

ம.இ.காவின் தலைவராக யார் வரவேண்டும் என்ற இறுதி முடிவு எடுக்கவேண்டியவர்கள் ம.இ.கா கிளைத் தலைவர்கள்தான். எப்போதும் கட்சியின் தேசியத் தலைவராக யார் வர வேண்டும் என்பதை சாமிவேலு மட்டும் முடிவு செய்து ம.இ.கா கிளைத் தலைவர்களிடம் இனியும் திணித்துக் கொண்டிருக்கக்கூடாது.

சரியான பாதையில் பழனிவேல்…..

ஆனால், சாமிவேலுவின் ஆதரவோடு பதவிக்கு வந்த பழனிவேல், இன்று வரை தன்னால் இயன்ற அளவுக்கு கட்சியை சிறந்த முறையில் வளர்த்து சீரமைத்து வருகின்றார்.

சாமிவேலு விட்டுச் சென்றபோது ம.இ.கா,. பொதுத் தேர்தல்களில் மோசமாக தோல்வியுற்று, கட்சியில் ஒற்றுமை குலைந்து, இந்தியர்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்திருந்த கால கட்டத்தில் இருந்தது. ஆனால், இன்று பழனிவேலுவின் தலைமைத்துவத்தாலும், இந்திய சமுதாயத்தின் மீது தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டிருக்கும் புதிய அணுகுமுறையாலும் கட்சி ஓரளவுக்கு சீர்பட்டு வரும் தருணத்தில் சாமிவேலு மீண்டும் மூக்கை நுழைத்து, தனது அடாவடி அரசியல் பாணியை அறிமுகப்படுத்தி கட்சியை மீண்டும் சீர்குலைக்க பார்க்கின்றார்.

சாமிவேலுவைப் போல் மேடையில் ஆக்ரோஷமாக பழனிவேலு பேசுவதில்லைதான். ஆனால், பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய நேரத்தில்,  பேச வேண்டிய விஷயங்களைப் பேசி, நடக்க வேண்டிய காரியங்களை சாதித்து விடுகின்றார்.

பேராக் மாநிலத்தில் நாம் பெற்ற சட்டமன்ற அவைத் தலைவர் பதவியே இதற்கு சான்றாகும்.

சாமிவேலுவைப் போல் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கிளைத் தலைவர்களைப் பார்த்து பழனிவேல் அவர்களை மிரட்டி உருட்டுவதில்லை. பி” பாரம் கொடுக்காமல் இழுத்தடிப்பதில்லை.

எல்லா கிளைத் தலைவர்களையும் பழனிவேல் மரியாதையாக நடத்துகின்றார். அவர்களுக்கு பேச்சு சுதந்திரத்தையும், கட்சியில் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றார். கட்சியில் தங்களுக்கும் பங்கிருக்கின்றது என்ற நினைப்பையும், கட்சியில் தாங்களும் ஓர் அங்கம்தான் என்ற எண்ணத்தையும், ஈடுபாட்டையும் கிளைத் தலைவர்களிடையே பழனிவேல் விதைத்திருக்கின்றார்.

அணி என்ற பிணியை கட்சியில் இருந்து முற்றாக ஒழித்திருக்கின்றார். ஒரு கிளைத் தலைவர் இவரைப் பார்க்கக்கூடாது, அவரைப் பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், மிரட்டல்களையும் சாமிவேலுவைப் போல் பழனிவேல் விதிப்பதில்லை.

நடப்பு அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கலந்து பேசி முடிவெடுக்கும் கலாச்சாரத்தையும் கட்சிக்குள் கொண்டு வந்திருக்கின்றார் பழனிவேல். மத்திய செயற்குழுக் கூட்டங்கள் தேசியத் தலைவரால்  சர்வாதிகாரத்தனமாக நடத்தப்படாமல் அனைவரின் கருத்துக்களுக்கும், மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்து கூட்டங்கள் நடத்துகின்றார்.

சாமிவேலுவுக்கு ஏன் இந்த போட்டி வெறி!

பழனிவேலுவைக் கொண்டு வந்த சாமிவேலு இன்று அதே பழனிவேலுவுக்கு முன்னின்று போட்டியை ஏற்படுத்த முயல்வது ஏன் என்பதை ம.இகாவினர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ம.இகா கிளைகள் தெருத் தெருவாக அலைந்து வசூலித்த பணத்திலும், அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக வாரி வழங்கிய பணத்திலும் கட்டப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தையும், எம்.ஐ.இ.டி அற நிறுவனத்தையும் இன்னமும் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் சாமிவேலு, முதலில் அவற்றை ம.இ.காவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், தேசியத் தலைவர் பதவியை விட்டு விலகிச் சென்று இரண்டரை ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஏன் எம்.ஐ.இ.டி.யும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகமும் இவர் வசம் இருக்க வேண்டும்?

இவர் தேசியத் தலைவராக இருந்தபோது இன்னொருவர் வசம் அவர் இந்த அமைப்புக்களை நிர்வகிக்க இடம் கொடுத்ததில்லை. இவரே நிர்வகித்தார். எனவே, இப்போதும் ம.இ.கா தேசியத் தலைவரின் வசம் எம்.ஐ.இ.டியும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகமும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அதனையே இன்னும் ஒப்படைக்காத சாமிவேலு, மீண்டும் தனது ஆதிக்கம் கட்சியில் இல்லையே என்ற ஆதங்கத்தில் இப்போது ஆர்ப்பரித்திருக்கின்றார், தலைமைத்துவ போட்டி தவிர்க்க முடியாதது என்று!

மீண்டும் தனது ஆதிக்கமும், அதிகாரமும், ஆணவத்தனமும் கட்சிக்குள் இருக்க வேண்டும் என்ற ஆசையால்தான் சாமிவேலு நன்றாக போய்க்கொண்டிருக்கும் ம.இ.கா கப்பலுக்குள் ஓட்டை போட்டு, கட்சித் தலைவருக்கு தேர்தல் என்ற பெயரில் கப்பலையே கவிழ்க்கப் பார்க்கின்றார்.

அன்றைக்கு முத்து பழனியப்பனை எதிர்க்க துணிவில்லாமல், முத்து பழனியப்பனுக்கு கையெழுத்திட்ட கிளைத் தலைவர்களை கூப்பிட்டு மிரட்டி, பயமுறுத்தி அவர்களின் மனுக்களை வாபஸ் வாங்க வைத்து, தேசியத் தலைவருக்கான போட்டியை தனது சர்வாதிகாரத்தனத்தால் தவிர்த்து விட்ட அதே சாமிவேலுதான் இன்றைக்கு தேசியத் தலைவர் பதவிக்கு போட்டி வேண்டும் என்று பேசுகின்றார்.

தனக்கு வேண்டியவர்களை கட்சியின் அதிகார பீடங்களில் அமரவைத்து விட்டு, அதன் பின்னர் பின்னணியில் இருந்து கொண்டு ம.இ.காவை இயக்க வேண்டும் என்பதுதான் சாமிவேலுவின் நோக்கம்!

ஆனால், சாமிவேலுவின் சர்வாதிகார தர்பார் மீண்டும் ம.இகாவில் அரங்கேறுவதை உண்மையான ம.இ.கா.காரன் யாரும் அனுமதிக்க மாட்டான்.

சாமிவேலுவும் இனியும் ம.இ.கா விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதுதான் அவருக்கும் நல்லது.”

-இவ்வாறு டத்தோ ஹென்ரி தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.