கோலாலம்பூர், ஜூலை 15 – ஜோகூர் மாநிலம் இஸ்கண்டார் மலேசியாவில் 20 இரயில் நிலையங்களை உள்ளடக்கிய, 1 பில்லியன் ரிங்கிட்டுக்கான இரயில் திட்டம் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலற்ற ஆட்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அத்திட்டம் திறந்த முறை குத்தகை மூலம் வழங்கப்படும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் பொதுத்தேர்தலுக்கு முன் அளித்திருந்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறியுள்ளார்.
“எதன் அடிப்படையில் இத்திட்டம் மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது? இத்திட்டத்தை அரசாங்கம் ஏன் திறந்த முறை குத்தகை மூலம் வழங்கவில்லை?”
அத்துடன், “எளிய கடனுதவி மூலம் கட்டுமான செலவில் 70 சதவிகிதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் போது, அத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் காரணம் என்ன?” என்று டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் நிறுவன அதிகாரிகள், இரண்டாவது நிதியமைச்சர் அகமட் ஹுசைனி ஹனாட்ஸ்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது அவர் இத்திட்டத்திற்கான அனுமதியை வழங்கியதாகவும் மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி, புர்ஸா மலேசியாவில் அறிவித்திருந்தது குறித்தும் டோனி புவா தெரிவித்தார்.
அதோடு, தினசரி வர்த்தக செய்தி நிறுவனமான ‘தி எட்ஜ்’ இணையதளத்திற்கு, மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி தாய் ஹீன் லெங் அளித்துள்ள நேர்காணலில், இந்த இரயில் திட்டத்திற்கு தனது நிறுவனம் 300 மில்லியன் ரிங்கிட்டும், எளிய கடனுதவியில் அரசாங்கம் 700 மில்லியன் ரிங்கிட்டும் முதலீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருந்ததையும் டோனி புவா சுட்டிக்காட்டினார்.
மேலும், இரயில் திட்டங்களில் மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் நிறுவனத்திற்கு போதிய அனுபவம் இல்லை என்று குறிப்பிட்ட டோனி, அரசாங்கம் இது போன்ற இரயில் திட்டங்களில் போதிய அனுபவம் இல்லாத நிறுவனத்திற்கு எந்த ஒரு திறந்த குத்தகையும் இன்றி நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் அனுமதி வழங்கியது ஏன் என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.