Home One Line P1 குவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது

குவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது

660
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பிணை வழங்க உதவும் நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஜசெக தொடங்கியது.

“அரசு தரப்பு 2 மில்லியன் ரிங்கிட் பிணை கோரியது, நீதிமன்றம் 1 மில்லியன் ரிங்கிட் நிர்ணயித்தது. ஆதரவாளர்களிடமிருந்து கடன் வாங்கிய பணத்துடன் நாங்கள் ஏற்கனவே 500,000 ரிங்கிட் செலுத்தியுள்ளோம், மேலும் இந்த திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு 500,000 ரிங்கிட் செலுத்த வேண்டும்.

“இந்த நன்கொடைகளில் ஏதேனும் அதிகமானவை அடுத்த பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்” என்று ஜசெக விளம்பர செயலாளர் டோனி புவா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பங்களிப்பு செய்ய விரும்பும் எவரும் அவ்வாறு செய்யலாம்: ஜசெக மலேசியா பொது வங்கி கணக்கு எண் 3063828309 மூலம் உதவிகளை வழங்கலாம்.

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பான குற்றத்தை மறுத்ததை அடுத்து, அவருக்கு இருவர் உத்தரவாதத்துடன் நீதிபதி ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கினார்.

மேலும், அவரது அனைத்துலக கடப்பிதழ்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி அசுரா அல்வி உத்தரவிட்டார்.

பினாங்கில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவியதற்காக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டின் படி, லிம், பினாங்கு முதல்வராக இருந்த காலத்தில், டத்தோ சாருல் அகமட் முகமட் சுல்கிப்லி பெற வேண்டிய இலாபத்தில் இருந்து, 10 விழுக்காடு மதிப்புள்ள வெகுமதியை இலஞ்சமாகக் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பினாங்கு நகரில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை மேற்கொள்ள சாருலுக்கு சொந்தமான நிறுவனங்களை நியமிக்க உதவியதற்கு ஒரு ஊதியமாக இந்த தொகைப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2011 மார்ச் மாதம் மிட் வெலி சிட்டியின் சைட் புத்ரா வட்டம், தி கார்டன்ஸ் தங்கும் விடுதி அருகே பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் இந்த குற்றத்தினை செய்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009- இன் பிரிவு 16 – இன் படி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. அதே சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சம் பெற்ற மதிப்பை விட ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.