Home நாடு ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்! – ம. நவீன்

ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்! – ம. நவீன்

1130
0
SHARE
Ad

Untitled-1ஜூலை 20 – – சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அவர்கள் பேசிய விஷங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதன் எதிரொலியாக மலேசிய இலக்கியச் சிற்றிதழான வல்லினத்தில் வெளிவந்த ம.நவீனின் கட்டுரை பின்வருமாறு:-

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குரியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது என இளம் தலைமுறை எழுத்தாளர்கள் முடிவெடுத்தது வரவேற்புக்குறியது. அதிலும் கடந்த வருடத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 19 பேரில் கே.பாலமுருகன், தயாஜி, அ.பாண்டியன், சுதந்திரன் போன்றவர்கள் இச்சூழலை எதிர்க்கும் முகமாக தங்களுக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கீகாரம்  தேவை இல்லை எனக்கூறியுள்ளது நடப்பு இலக்கியச் சூழலின் மேல் நம்பிக்கையைப் பாய்க்கிறது.

இந்த நிலையில் இவ்விருவரும் வெளியிட்ட கருத்துகளுக்கு அவர்கள் இருவரும் பொறுப்பேற்று அது குறித்த விவாதத்திலோ அல்லது தங்கள் நிலைப்பாட்டையோ உறுதிசெய்வது கடமையாகிறது. அதற்கு முன் மிகவும் பிற்போக்கானதாகக் கருதப்படும் அவ்விருவரின் கருத்தை ஒட்டியும் எதிர்வினையைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். மலேசிய இலக்கியத்தை அடுத்தடுத்தத் தளங்களுக்கு முன்னெடுக்க முயலும் இளம் தலைமுறையினரின் முயற்சிகள் இதுபோன்ற பிற்போக்கான கருத்தாக்கங்களால் புதிய தலைமுறை எழுத்தாளர்களும் மொண்ணையான பிரதிகளே கக்குவார்கள் என்பதால் இதுகுறித்து விவாதிப்பது அவசியமாகிறது.

#TamilSchoolmychoice

“தமிழகத்தில் பெண்ணியம் என வரம்பு மீறி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மலாதி மைத்ரி குட்டி ரேவதி போன்றவர்கள் அவையங்களை படைப்பிலக்கியங்களில் கொண்டுவருகிறார்கள். நாம் இன்னமும் அந்த நிலைக்குப் போகவில்லை. நம்முடைய இலக்கியம் அந்தச் சூழலுக்கும் போகவில்லை. இந்தச் சமூகமும் அதற்கு தயாராக இல்லை. நாம் நம்முடைய வழியிலேயே அந்தப் பெண்ணியத்தைப் பார்க்கமுடியும்.” இவ்வாறு கிருஷ்ணன் மணியம் அவர்கள் கூறியுள்ளார். இந்தக் கருத்தின் போதாமைகளில் ஒன்றைச் சொல்லிவிட்டு அடுத்து விவாதத்திற்குச் செல்லலாம் என நினைக்கிறேன். முதலில் இந்த மிகப்பழமையான கருத்து ஏறக்குறைய 9-10 வருடங்களுக்கு முன் தமிழ் இலக்கியச் சூழலில் வைக்கப்பட்டது. சில சமயங்களில் ஃபேஷனுக்கு ஏதாவது ஒன்றை பேசி அதுகுறித்த அறியாத மக்களை திகைப்படைய வைப்பது சிலருக்கு வழக்கமாகிவிட்டது. தொடர்ச்சியான ஆய்வில் இயங்கும் முனைவர் அவர்கள் காரணம் இல்லாமல் ‘தற்போது’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். ஒருவேளை என் கண்களில் படாத மாலதி மைத்ரியின் நூலையோ குட்டி ரேவதியின் நூலையோ வாசித்திருக்கலாம். அது என்ன புத்தகம் என்றும் அது என்ன கவிதை என்றும் சொன்னாலும் நாமும் படித்து பயனடையலாம்.

எனக்குத் தெரிந்து அவரது முதல் தொகுதி  ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ 2000 யிரத்தில் வெளியீடு கண்டது. அதன் பின்னர் 2002ல் ‘முலைகள்’ எனும் கவிதை தொகுப்பு வெளியீடு கண்டது. இறுதியாக ‘உடலின் கதவு’ 2006ல் வெளியீடு கண்டது. அப்படியும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இக்காலக்கட்டத்தில் திருநங்கைகளில் இலக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் தமிழக இலக்கியம் போய்க்கொண்டிருக்க, பழைய சங்கதியே இன்னும் புதுசாகப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன நியாயம்? சரி அப்படியே நீங்கள் ‘முலைகள்’ என்ற தலைப்புடன் வந்த குட்டி ரேவதியின் தொகுப்பைத்தான் சுட்டுகிறீர்கள் என்றாலும் அதுகுறித்தும் சில கருத்துகள் உண்டு. இன்று ஆபாசமான, அசிங்கமான, அருவருப்பான ஒரு சொல்லாகிவிட்ட ‘முலைகள்’ தமிழ் சினிமாவில், மலிவு இலக்கியத்தில், வெகுஜன இதழ்களில் வணிகப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ச்சினிமா பாடல்களில் கூலிக்கு மாரடிக்கும் வைரமுத்து , வாலி போன்ற  தாத்தாக்கள் அச்சொல்லை திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர் வணிக நோக்கில். ஆனால் அவர்களை அழைத்துவந்து இலக்கியவாதிகள் என கால்களை விழ பலர் இங்கு தயாராக உள்ளனர்.

இலக்கியத்தில் பார்த்தாலும் ,

பாரதி, ‘ … குழல் பாரத்திலே, இதழ் ஈரத்தி லேமுலை ஓரத்திலே’ என்கிறார்.
பிரமிள், ‘… இவ்வொளி யோனியை தடவி விரித்தது எவர்கை’ என்கிறார்
கலாப்ரியா , …தடிச்சியின் முலையில் விழுந்து உருளும்’ என்கிறார்.

இப்படி வணிகத்துக்காகவும் இலக்கியத்துக்காகவும் ஆண்கள் முலை, யோனி என்ற சொற்களை உபயோகிக்கும் பொழுது ஒரு பெண் தனது புனைவில் அச்சொற்களை நிறுத்துவது உங்களைப் போன்றவர்களை ஏன் 10 வருடத்திற்குப் பின்பும் கலங்கடிக்கிறது எனப்புரியவில்லை. குட்டி ரேவதி தன் நேர்காணல் ஒன்றில் தெளிவாகச் சொல்கிறார், ” நம்முடைய உடலை நான் ஒரு பெரிய நிலவெளியாகப் பார்க்கிறேன். ஒரு புவியியல் நிலப்பரப்பானது இலையுதிர்காலம்,இளவேனில்,கோடை என எப்படிப் பலவிதமான பருவங்களைக் கடந்து வருகின்றதோ அப்படியான ஒரு நிலவெளியாகத்தான் உடலைப் பார்க்கிறேன். அதையொரு உறுப்பாக,பொருளாகப் பார்க்கவில்லை.”  பின்நவீனத்துவம், மாய எதார்த்தவாதம் போன்றவற்றை பேசும் முனைவர் ஒரு கவிதையில் ‘மலை’ எனச்சொல் வந்தால் அதை மலையாகப் பார்க்காமல் ஆயிரத்தெட்டு அர்த்தப்படுத்துகிறார். கவிதையில் ஒரு சொல் அந்தச் சொல்லாக மட்டுமா இருக்கிறது? மீ மொழியில் ( meta language)’முலை’ என்ற சொல்லுக்கு ஒரு கவிதை என்னவாகவெல்லாம் அர்த்தம் கொடுத்துள்ளது என ஏன் வாசிக்க மறுக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. அதன் அடிப்படைக்காரணமே குட்டி ரேவதி பெண்ணாக இருப்பதுதான். இதை ஒரு ஆண் செய்திருந்தால் இலக்கியம் வளர்ந்துவிட்டது என்றிருப்பீர்கள் இல்லையா? இதே போல மாலதி மைத்ரியும் ஒரு கட்டுரையில் சொல்கிறார், “எனது கவிதைகளில் இடம் பெறும் யோனி என்ற உருவகம் சாக்தேய மரபில் தெய்வமாக வழிபடப்படும் மகாசக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊறு. நெருப்பாலான பிரபஞ்ச சக்தியின் ஆதிமூலம்” என்கிறார்.

ஒரு கவிதையை வாசிக்கவும் ஒரு கவிஞரின் உலகை அறியவும் ஆழமான வாசிப்பும் அதைவிட மேலாக கவிதை குறித்த புரிதலும் அவசியமாகின்றது. செய்தித்தாளை வாசிப்பதுபோலெல்லாம் கவிதையை வாசித்து கருத்துச்சொல்ல வருவது அபத்தம்.

சரி , அடுத்து பெண்கள் தங்கள் அவையங்களை படைப்பிலக்கியங்களில் பேசுதல் வரம்பு மீறியச் செயல் எனக்கூறியுள்ளீர்கள். அதுவும் இவையெல்லாம் அண்மையில் நடப்பதுபோல சொல்லியுள்ளீர்கள். என் சிற்றறிவுக்கு எட்டியவரை ஔவை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் பெண் கவிஞர்கள்தான். அவர்கள்  தங்கள் புனைவுகளில் பெண் அவையங்களை எழுதவில்லை என்கிறீர்களா?

‘வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.’ – ஒளவை, புறமுதுகு காட்டி ஓடாத வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன என்கிறார்.

ஒருவேளை முனைவர் அவர்கள் சொல் பயன்படுத்திய நோக்கத்தைச் சுட்டிப் பேசியிருக்கலாம். அதற்கும் ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன.

‘முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ வொல்லெனக் கூவு வென்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே’ – உடல் சார்ந்த ஆற்றாமைகளை வலிமையுடையனும் தாபத்துடனும் வெளிப்படுத்தியுள்ள ஔவையின் பாடல் இது. இதே போல ஆண்டாளும் :

‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’

‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’

‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’

மிக எளிதாகவே விளக்கம் புரியும் ஆண்டாளின் இப்பாடல்களுக்கு. அப்படியானால் ஆண்டாள் பாடல்கள் அண்மையில் எழுதப்பட்டவையா என்ன? ஆண்டாளை நீங்களெல்லாம் விமர்சிக்காதது ஏன்? அவள் வைணவ மரபுடன் இணைந்துள்ளதாலா? அல்லது கடவுளை நோக்கி தன் காமத்தைச் சொன்னதாலா? அப்படியானால் கடவுளை நோக்கி காமத்தைச் சொன்னால் ஏற்பீர்கள் எனப்புரிந்துகொள்ளலாமா? ஒரு பெண் தன் காதலை காமத்தை வெளிப்படுத்துவதுதான் இந்துமதத்தில் பெரும் குற்றமாக வர்ணிக்கப்படுகின்றதே. தன் அண்ணனிடம் காதலைச் சொன்ன சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த லட்சுமணன் மூன்று மனைவிகளைக் கொண்டிருக்கும் தன் தந்தை தசரதனின் குறியை அறுத்திருக்க வேண்டாமா? மதம் ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றும் எனத்தானே கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அடுத்ததாக ‘அத்துமீறல்’ என்பதற்கான அளவீடுகளை முனைவர் அவர்கள்தான் விளக்க வேண்டும். எதுவரை இருந்தால் அது அத்துமீறல் இல்லை. ‘முகம் சுளிக்காமல்’ என பதில் வரலாம். யார் முகம்? உங்கள் முகமா? அப்படியானால் உங்கள் வாசிப்புக்கான தேர்வை நிகழ்த்துவது  உங்கள் சாமர்த்தியம். அதை பொதுமதிப்பீடாகச் சொல்லவேண்டாம் என்பதே எங்கள் வாதம். அதோடு நீலப்படங்களுக்கு நிகராக நமது தமிழ்ப்படங்களில் வரும் காட்சியின்போது நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள் என மட்டும் உங்கள் மனசாட்சியிடம் பதில் கூறிக்கொள்ளுங்கள். வாசிப்பு உங்கள் தேர்வாக இருக்க இந்நாட்டில் இதுபோன்ற இலக்கியங்கள் எழுதப்படவில்லை என்பதும் தவறான கூற்றுதான். அதிகமில்லை என்றாலும் குறைந்தளவாவது எழுதப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஏன் எழுதப்படக்கூடாது என்பதற்கான காரணங்களை உங்களை நான் எதிர்ப்பார்க்கும் அதே வேளை ஏன் எழுதப்படவேண்டும் எனச்சொல்வதும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்நூற்றாண்டில் ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள் என்ற கருத்து பொதுவாக உள்ளது. அவள் சமூக விடுதலை அடைந்துவிட்டாள் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவள் உடல் மீதான வன்கொடுமைகள் நிறுத்தப்பட்டுவிட்டன என உங்களால் கூற முடியுமா? அவள் புலங்கும் எல்லா இடங்களிலும் அவள் உடலுக்கு அச்சுருத்தலாக விளங்கும் ஆணுக்கு அவள் பதிலடிக்கொடுக்க உடலையே ஆயுதமாகப் பயன்படுத்தினால் நமக்கெல்லாம் பதற்றம் வருகிறது இல்லையா? வேறென்ன செய்வது முனைவர் அவர்களே… நம்மாலெல்லாம் மிரட்டி ஒரு பெண்ணின் உடையை கிழிக்க மட்டுமே முடிகிறது… அவளுக்கு உடையை அணிவிக்க வக்கற்றவர்களாகவே இருக்கின்றோம்.

அடுத்ததாக எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன்.

அவர் தனதுரையில் சில அரும் கருத்துகளை உதிர்த்துள்ளார்.

-மாமியார் மருமகள் சண்டைய பாத்திருப்போம்; ஆனா ஒருமகன மாமியார் குறை சொல்லியிருக்கிறார்களா?
– தமிழ் சார்ந்த கருத்தரங்குகளில் எங்காவது ஆண்களுக்கான கருத்தரங்கு என மட்டும் உண்டா?
– எங்காவது ஆண்களின் சிறுகதை/ கவிதைகள்/ கட்டுரைகள் மட்டுமே என வெளியீடுகள் கண்டடுள்ளதா?

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக “இதெல்லாம் ஆண்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.” என்கிறார். அதன் பிறகு அவர் எப்படி பெண்ணியத்தைப் பேணுகிறார் எனவும் பேச ஆரம்பித்தார். “எழுத்தாளர் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விருது பட்டியலில் பெண்களை இணைத்துக்கொள்கிறோம். நான் தலைவர் ஆனப்பின்பு விருதளிப்பில் பெண்களின் பெயரைக் அதிகம்  கூட்டியுள்ளேன். அது எழுதப்படாத சட்டமாகிவிட்டது” என்றபோது பெண்களிடமிருந்து கைத்தட்டல் ஓசையெல்லாம் வேறு கேட்கிறது. அப்புறம் இன்னொரு இடத்தில் எழுத்தாளர்களில் ஆண் பெண் பேதமெல்லாம் பார்க்கக் கூடாது என்கிறார். அப்புறம் எதற்கு தான் தலைவரானப்பின் பெண்களுக்கு அதிகம் விருதுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகச் சொல்கிறார் எனப்புரியவில்லை. ஆனால் ஆண்களின் பெருந்தன்மையினால்தான் பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள் என்ற அவர் கருத்துக்கு க.பாக்கியத்தை தவிர இன்றுவரை மூத்த பெண் படைப்பாளிகளிடமிருந்து எந்த பதிலும் வராதது வேதனை. இத்தனை அவமானங்களையும் சுமந்துகொண்டு நாளை ராஜேந்திரன் கொடுக்கும் ஏதாவது ஒரு விருதுக்குக் கையேந்தி ஓடவும் செய்வார்கள் நமது படைப்பாளிகள். சிலர் , ‘அவர் பல நல்ல தகவல்களைச் சொன்னார். ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பிரசுரித்து அதை பரப்புவது நியாயமில்லை.’ எனும் தொணியில் பேசவும் செய்கின்றனர். “உங்களுக்கு சுவையான பதார்த்தங்களோடு தட்டின் ஓரமாக மலத்தையும் பரிமாறினால் … மறுக்காமல் உண்பீர்களா? இவ்வளவு நல்லது இருக்கும் போது சின்ன குறைதானே என ஏப்பம் விடுவீர்களா? ” என மட்டுமே நாம் அவர்களை நோக்கி கேட்க முடியும்.

இந்தக் கருத்தின் வழி ராஜேந்திரன் மறைமுகமாக ஒன்றைச் சொல்கிறார். தான் வந்தப்பின்புதான் மாற்றம் என்றால் ஆதிகுமணன் பெண் படைப்பாளிகளை மதிக்கவில்லை என்கிறார். அடுத்தது விருது பெருபவர்களை இயக்கம் முடிவு செய்யவில்லை. தான் ஒருவரே அனைத்தையும் முடிவு செய்வதை ஒப்புக்கொள்கிறார். அதன் மூலம் எழுத்தாளர் சங்கம் தனி ஒருவரின் நிறுவனம் எனவும் தெளிவு படுத்துகிறார்.

இதே உரையில் ராஜேந்திரன் சொன்ன வேறொரு கருத்தையும் செவிமடுத்தேன். பெண்கள் ஆண்களால் அடக்கப்படவில்லை. அடங்கிபோவது அவர்கள் இயல்பாக இருக்கலாம் என்றார். ராஜேந்திரன் பேசுவது நினைப்பது எல்லாம் ஒன்றுதான். இந்த நாட்டில் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பெண்கள் அடங்கி ஒடுங்கி இருப்பது அவர்கள் இயல்பு. யாரும் யாரையும் அடக்கவில்லை என்பதுதான் அதன் சாரம்.

பெண் உடலின் அமைப்பு இயற்கையானதாக இருந்தாலும் பெண்மை என்று இன்று சமூகம் நம்பிக்கொண்டிருக்கும் விழுமியங்கள் இயற்கையானது அல்ல என்பதை ராஜேந்திரன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் பால் வேறுபாடு இயற்கையானது ஆனால்  பால் மேலாதிக்கம் கட்டமைக்கப்பட்டது. இப்படி ராஜேந்திரனைப் போல போகிற போக்கில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போவதில் எனக்கு விருப்பம் இல்லைதான்.  கொஞ்சம் வரலாறைப் புரட்ட வேண்டியுள்ளது.

மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று ஆண் மிருகங்களைவிட பெண் மிருகங்கள் வேட்டையில் சிறந்துவிளங்குவதை உதாரணமாகக் கொள்ளலாம். ஆண் அனோஃபிலீஸ் கொசு நம்மைக் கடிப்பதில்லை ,  பெண் கொசுதான் துரத்தி துரத்தி நம்மை கடித்து மலேரியாவை பரப்புகிறது. ஆக, தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதை தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர். ‘பொனொபொ’  மற்றும்  ‘சிம்பான்ஸி’ குரங்குகள் இனமும்  பெண்வழி சமூகமாக இருப்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு உதாரணம். தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை. உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம். ஒருவகையில் கொற்றவை போன்றுதான் நம் பெண்களும் கடைசியில் ஒருவனுக்கு மனைவி என்ற அடையாளத்துடன் முடிந்துபோகிறார்கள்.

இன்று நாம் காண்பது  தந்தை வழிச் சொத்துரிமை உள்ள சமூகம். இதில் தந்தை என்ற அடையாளம் சமூகநோக்கில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாகவேண்டும்.  அந்த அடிப்படையில்தான் பெண்ணுக்கான ஒழுக்கம் கட்டமைக்கப்பட்டது. அது பரிணாமம் அடைந்து கற்பு ஆனது.  இன்று ஆண்கள் கற்பு பற்றியும் பெண்களின் அடக்க ஒடுக்கம் பற்றி பேசுவதெல்லாம்  பெண் உடல்மீதான முற்றாதிக்கம் தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தினால்தான்.  என்ன செய்வது ராஜேந்திரன் கற்பு என்பது பெண்ணின் கால்களுக்கு நடுவே இருக்கிறது என்றுதானே உங்களைப்போல பலரும்  நம்பிக்கொண்டிருகிறார்கள்.