கோலாலம்பூர், ஜூலை 22 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று புத்ரஜெயாவில் மூன்று பேர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இருப்பினும், அன்வாரின் தலைமை சட்ட ஆலோசகரான கர்பால் சிங் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதால், இந்த விசாரணையை தள்ளி வைக்க நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளதாக மலேசியா கினி செய்தி இணையதளம் கூறுகிறது.
கர்பால் சிங்கின் மகனான ராம்கர்பால், தனது தந்தை கடந்த வாரம் முதல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உறுதியளித்தார்.
இருப்பினும், கடந்த வாரம் தொழிலதிபரைத் தாக்கிய வழக்கில், உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடிக்கும், தொழிலதிபர் அமீர் பஸ்லிக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிகழ்வில் கர்பால் சிங் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக தலைமை வழக்கறிஞர் முகமட் சபி அப்துல்லா தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
தனது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புகாரி அஸ்லானை ஓரினப்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த வருடம் ஜனவரி மாதம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அன்வாரை விடுவித்தது.