கோலபெசுட், ஜூலை 24 – தான் தேர்தல் ஆணையத்தில் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இது வரை கோல பெசுட் இடைத்தேர்தல் போல் அமைதியான ஒரு தேர்தலை கண்டதில்லை என்று தேர்தல் ஆணையத்தின் துணைத்தலைவர் வான் அகம்ட் வான் ஓமார் கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் மிக அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், இரண்டு அணி வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் எந்த ஒரு தவறான நடத்தைகளும் இன்றி, அமைதியான வகையில் வாக்களிப்பு நடக்க ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“வாக்காளர்களுக்கு தொந்தரவு தரும்படியான எந்த ஒரு கூச்சலோ, சத்தமோ வாக்களிப்பு மையத்திற்கு வெளியே இல்லை. எல்லோரும் ரம்லான் மாதத்திற்கு மரியாதை கொடுக்கின்றனர். நான் வாக்காளர்களின் அணுகுமுறையைக் கண்டு மனம் மகிழ்கிறேன்” என்று கோல பெசுட்டில் உள்ள எஸ்கே அலோர் பிறை வாக்களிப்பு மையத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் வான் அகமட் தெரிவித்தார்.
அதன் பின்னர், கோல பெசுட் தொகுதியில் உள்ள மற்றொரு வாக்களிப்பு மையமான எஸ்கே கம்போங் நங்காவிற்கு சென்ற அவர், அங்கும் தேர்தல் எந்த ஒரு புகாரும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
அதோடு, இன்று மாலை வாக்களிப்பு நிறைவடைவதற்குள் 75 சதவிகித வாக்குகள் பதிவாகிவிடும் என்றும் அவர் வான் அகமட் குறிப்பிட்டார்.