Home இந்தியா மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்த ஆண்டாவது நிறைவேறவேண்டும்: கருணாநிதி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்த ஆண்டாவது நிறைவேறவேண்டும்: கருணாநிதி

580
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 30- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பது கடந்த பதினாறு ஆண்டுகளாக அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு பிரச்சினையாகும். மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நிறைவேற்றப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும், பிறகு ஏதோ ஒரு காரணத்தால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போய் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

karuna_1375724fகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது; கடந்த முறை பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி நிறைவேற்றவிடாமல் தடுத்து விட்டனர். ஆனால் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றிட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

8-3-2010 அன்று பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டமசோதா, மாநிலங்களவையில் பெரும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான வாக்கெடுப்பு அதற்கடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மறுநாள் பலத்த சர்ச்சை மற்றும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவை, மக்களவையிலே நிறைவேற்ற முடியவில்லை. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவினைத் திரட்ட முடியவில்லை. இந்த நிலைதான் இப்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நாடாளுமன்றம் கூடுகின்ற நேரத்தில் எல்லாம் அந்தக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா கொண்டு வரப்படும் என்றும், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிமொழிகள் தரப்படுகின்றன. “பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை” என்று சட்டம் நிறைவேற்றிய நம்மைப் பொறுத்த வரையில், நம்முடைய இயக்கத்தின் முக்கிய கொள்கைகளிலே ஒன்று மகளிர்க்கு இட ஒதுக்கீடு. அந்த முறையில் வரும் ஆகஸ்ட் திங்களில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலாவது மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா அனைவரது ஒத்துழைப்போடும், நல்லாதரவோடும் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.