தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதை தொடர்ந்து நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை விஜயசாந்தி ஆந்திராவின் மேடக் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த இவர் தெலுங்கானா தனி மாநிலம் கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், 2014 பாராளுமன்ற தொகுதியில் மேடக் தொகுதியில் சந்திரசேகர் ராவ் போட்டியிட விரும்பியதாக தெரிகிறது. எனவே செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட விஜயசாந்தியிடம் கட்சி தலைமை கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசாந்தி கட்சி நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
இதற்கிடையே தெலுங்கானா தனி மாநிலத்துக்கு மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டுள்ள நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து வருகிறார்.
மேலும் தெலுங்கானா அறிவிப்பு வெளியிட்ட உடனே, ஐதராபாத்தில் உள்ள விஜயசாந்தியின் வீட்டுமுன், சந்திரசேகர் ராவுடன் அவர் இணைந்திருப்பது போன்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோரின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டன.
இதன் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், இந்த இணைப்பு நிகழ்ச்சி 8-ந்தேதி நடைபெறும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.