Home இந்தியா திருமயத்தில் புதிய பாய்லர் ஆலை: பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார்

திருமயத்தில் புதிய பாய்லர் ஆலை: பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார்

694
0
SHARE
Ad

திருச்சி, ஆக. 1– புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடி பட்டியில் 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.600 கோடி செலவில் பாய்லர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை நடக்கிறது.

இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பாய்லர் ஆலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்காக நாளை (2–ந் தேதி) காலை 11 மணி அளவில் தனி விமானத்தில் திருச்சிக்கு பிரதமர் மன்மோகன்சிங் வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருமயம் அருகே உள்ள ஓலைக்குடி பட்டியில் பாய்லர் தொழிற் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் காலை 11.40 மணிக்கு இறங்குகிறார். அங்கு மத்திய மந்திரிகள், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மற்றும் பாய்லர் ஆலை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

manmohan-singhஇதை தொடர்ந்து டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள குண்டு துளைக்காத காரில் பிரதமர் மன்மோகன் சிங் பாய்லர் தொழிற்சாலை வளாகாத்திற்கு செல்கிறார். விழா மேடைக்கு பேட்டரி கார் மூலம் 11.50 மணிக்கு சென்றதும் விழா நிகழ்ச்கிகள் தொடங்குகின்றன. அப்போது பிரதமர் மன்மோகன் சிங் பாய்லர் தொழிற்சாலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதில் மத்திய மந்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

விழா முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் மதியம் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்படுகிறார். மதியம் 1.15 மணிக்கு ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. உடனடியாக திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் பங்கேற்கும் விழாவுக்காக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திருச்சி மத்திய மண்டலத்திற் குட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2 அணியை சேர்ந்த 150 பேரும், பெல் ஆலையின் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையினர் மற்றும், சிறப்பு பாதுகாப்பு குழுவினர் 50 பேரும், வெடி குண்டு பரிசோதனை மற்றும் தடுப்பு பிரிவின் 8 குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை சாலையில் மணவாளங்கரை, திருமயம், காரைக்குடி சாலையில் சவேரியார்புரத்திலும், திருமயம் விருந்தினர் மாளிகை, திருப்பத்தூர் சாலையில் பி.அழகாபுரி உள்பட மாவட்டத்தில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கைக்கான சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாளை காரைக்குடியில் இருந்து திருமயம் வரும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்களை பாதுகாப்பு கருதி மாற்று பாதையில் திருப்பி விடவும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் பாதுகாப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி. விராகித் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு (ரெட் அலர்ட்) செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏற்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள பகுதிகளில் வெளி நபர்கள் யாரும் தங்கி உள்ளார்களா ? என்று ஆய்வு செய்து வரும் போலீசார் திருச்சி விமான நிலையம் முழுவதையும் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் திருமயம் வருகையை யொட்டி அந்த பகுதி முழுவதும் ஏராளமான கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.