மும்பை, ஆக. 21- விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
தணிக்கை குழு (சென்சார் போர்டு) அனுமதியளித்த பிறகு இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். யூகங்களின் அடிப்படையில் நிறைய பேர் இத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கட்டும். பிறகு முடிவு செய்வோம்.
கதை எப்படி இருக்கிறதோ, அதை அப்படியேதான் சொல்ல வேண்டும். எனது படம் பலிகடா ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நான் மாநில அரசிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுள்ளேன்.
இத்திரைப்படம் எந்த ஒரு அரசுக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இருக்கவில்லை. இப்படம் மனித உயிர்களின் இழப்பை வலியுறுத்துகிறது. எனவே, இத்திரைப்படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நான் நீக்கப்போவதில்லை.
இத்திரைப்படம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்படவில்லை. ஒரு நல்ல படம் மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும். இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.