செப்டம்பர் 13 – நமது நாட்டின் தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பெற்றுள்ள,‘பாக் சமாட்’ என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் ஏ.சமாட் சைட் (முழுப்பெயர் அப்துல் சமாட் பின் முகமட் சைட்) தொடர்ந்து தெரிவித்து வரும் அரசியல் மற்றும் மக்கள் சார்ந்த கருத்துக்களையும், அவரது போராட்ட உணர்வுகளையும், அவரது இலக்கியப் படைப்பாற்றலோடு தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடாது என்பதுதான் பெரும்பாலான மலேசியர்களின் தாழ்மையான விருப்பமாகும்.
பாக் சமாட்டின் தேசிய இலக்கியவாதி விருது பறிக்கப்படலாம் என அமைச்சர் அகமட் சாபரி சிக் விடுத்திருக்கும் எச்சரிக்கை அனைவருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஒடிந்து விழும் ஒல்லியான உருவம்! முகத்தைச் சுற்றி காற்றில் அலைபுரளும் வெண்ணிற தாடியோடு கூடிய நீண்ட முடி! வயதோ 81 – இப்படியாக சிறிய உருவமானாலும், தள்ளாடும் வயதானாலும், போராட்ட உணர்வில் யாருக்கு சளைக்காத பாக் சமாட், மலேசியர்களுக்கு ஒரு முன்னுதாரண மனிதராக திகழ்ந்து வருகின்றார்.
பெர்சே என்ற தூய்மையான பொதுத் தேர்தலுக்காக போராடும் அமைப்பின் தலைவராக அவரது செயல்பாடுகள் அனைத்து மலேசியர்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே வேளையில், பல விவகாரங்களில் அவர் தனது சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார். அதுவும் அவரது தனிப்பட்ட சுதந்திர உரிமை!
கடந்த கால சரித்திரங்களை திரும்பிப் பார்த்தால், உலகின் மிக உயர்ந்த நோபல் இலக்கியப் பரிசு பெற்ற உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சிறந்த இலக்கியவாதிகள், சமூகப் போராளிகளாகவும், மக்களுக்காக போராட்டக் களத்தில் நிற்பவர்களாகவும்தான் இருந்திருக்கின்றார்கள்.
சமூகத்தின் சரியற்ற போக்குகள் மீதான கோபம், ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு வெளிப்படும் எரிச்சல், அநியாயங்களுக்காக விடுக்கும் அறைகூவல், கீழ்நிலை, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலைக் கண்டு மனதுக்குள் பொங்கியெழும் ஆதங்கம் – இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு தனிமனிதனின் இலக்கியப் படைப்பாற்றலை மெருகூட்டுகின்றன, மற்றவர்களிடமிருந்து அவனை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.
ஒரு சில இலக்கியவாதிகளின் இதுபோன்ற போராட்ட உணர்வுகள்தான் அவர்களை நோபெல் பரிசு வரை அழைத்துச் சென்றன என்பதுதான் உண்மை.
அருந்ததி ராய் என்ற சமூகப் போராளி…
குறிப்பாக, இந்தியாவின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரும், உலகின் சிறந்த இலக்கியப் பரிசுகளில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் (Booker) எனப்படும் பரிசை வென்றவருமான அருந்ததி ராய், இன்றைக்கு அவரது படைப்பாற்றலைவிட அவரது போராட்ட உணர்வுகளுக்காகத்தான் மக்களின் மனங்களில் நிலையானதொரு இடத்தைப் பிடித்திருக்கின்றார்.
மலைவாழ் மக்களுக்காகவும், நதிகள் தொடர்பான போராட்டக் களங்களிலும் இந்தியாவில் எந்த மூலையாக இருந்தாலும் அங்கு முன்னணியில் நிற்பவர் அருந்ததிராய்தான்.
ஆனால், அதற்காக, அவரது இலக்கிய ஆளுமையை யாரும் இதுவரை விமர்சித்ததும் இல்லை. அவரது அந்தப் பட்டத்தைப் பிடுங்குவேன், இந்தப் பட்டத்தை பிடுங்குவேன் என்று யாரும் இதுவரை தராதரம் தெரியாமல் பேசியதும் இல்லை.
இலக்கியத் திறனையும், போராட்ட உணர்வையும் வேறுபடுத்தி வைப்போம்
எனவே, ஒருவன் சிறந்த இலக்கியவாதி என்பதால், அவனுக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் இருக்கக் கூடாது, அவனுக்கென்று சுயமான அரசியல் சிந்தனைகள் இருக்கக்கூடாது என்று யாராவது கூற முடியுமா?
அரசாங்கத்தின் விருதொன்றைப் பெற்றுவிட்டதால், அதற்காக என்றைக்கும் அரசின் கருத்துக்களுக்கே ஆமாம் சாமி போட வேண்டும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மாற்றான மனப்போக்கை வெளிப்படுத்தக் கூடாது என நினைப்பதுதான் நியாயமாகுமா?
இன்றைக்கு எதிர்க் கட்சிகளில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமாக இயங்கிவரும் பல அரசியல் தலைவர்களை, கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட டத்தோ, டான்ஸ்ரீ போன்ற பட்டங்கள் அலங்கரிக்கின்றன.
அதற்காக, அவர்களின் அந்தப் பட்டங்களைப் பிடுங்கி விடுவோம் என்று இதுவரை யாரும் கூறவில்லை.
பின் ஏன் பாக் சமாட்டின் பட்டத்தை மட்டும் பிடுங்க வேண்டும் என்ற கூக்குரல்?
எல்லாவற்றுக்கும் மேலாக, அமைச்சருக்குத் தகுந்த பதிலடியாக, எனது குடியுரிமையை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளுங்கள், அதற்காக எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் தனது போராட்ட உணர்வில் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கும் பாக் சமாட், மக்களின் மனங்களிலும் மேலும் ஒரு படி உயர்ந்து விட்டார்!
-இரா.முத்தரசன்