பினாங்கு, செப்டம்பர் 16 – கெராக்கான் கட்சியின் தலைமைச் செயலாளரான தெங் சாங் இயோ (படம்) பினாங்கு மாநில கெராக்கான் தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகள் பெற்றதன் மூலம், அந்த மாநிலத்தின் கெராக்கான் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தெங் 220 வாக்குகள் பெற்ற வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பால்ஜிட் சிங் 106 வாக்குகள் பெற்றுள்ளார். பல இன கட்சியான கெராக்கான் கட்சியில் சீனர்களின் ஆக்கிரமிப்பே அதிகமாக இருந்தாலும், ஓர் இந்தியரான பல்ஜிட் சிங், போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது, அந்த கட்சியில் மாறிவருகின்ற சூழ்நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, சிலாங்கூர் மாநிலத் தலைவராக இருக்கும் கோகிலன் பிள்ளை, கெராக்கான் சார்பாக துணையமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் எச்.புவநீதன் என்ற இந்தியரும் ஒருவராவார்.
டாக்டர் தெங் ஹோக் நானுக்கு பதிலாக தெங் தற்போது பினாங்கு மாநிலத் தலைமைப் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது இதில் வென்றவர், தோற்றவர் என்ற பாகுபாடு இல்லை மாறாக கட்சிதான் வெற்றி பெற்றது என்று தெங் கூறினார்.
தோல்வியடைந்த பால்ஜிட் சிங், தனக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பது, கெராக்கானின் பல இன கட்சி அரசியலை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறினார். வாக்களித்தவர்கள், இன ரீதியாக வாக்களிக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.