கோலாலம்பூர், நவ 28 – சிலாங்கூர் மந்திரி பெசார் உட்பட அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்து இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சம்பள உயர்வு மிகவும் அதிகம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தஞ்சோங் காராங் தொகுதியைச் சேர்ந்த தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நோ ஓமார் கூறுகையில், சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு மாதம் 29,250 ரிங்கிட் சம்பளம் அதாவது 106% சதவிகித சம்பள உயர்வு கொடுத்துள்ளது நியாயமற்றது. சிலாங்கூர் அரசாங்கம் தங்கள் மாநிலத் தலைவர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பது இது இரண்டாவது முறையாகும்.” என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு கேட்ட போது அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும், ஆனால் தற்போது தங்கள் மாநிலத் தலைவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியிருப்பதன் மூலம் இரட்டைப் போக்காக செயல்படுகிறார்கள் என்றும் நோ ஓமார் குறிப்பிட்டார்.
மந்திரி பெசார் மற்றும் மாநிலத் தலைவர்களின் பணி மிகவும் கடினமான ஒன்று தான். அவர்களுக்கு சம்பள உயர்வு தேவை. ஆனால் 100 சதவிகித சம்பள உயர்வு என்பது மிகவும் அதிகம் என்றும் நோ ஓமார் தெரிவித்தார்.
பிரதமர் துறை அமைச்சரான டத்தோஸ்ரீ சாஹிடன் காசிம் கூறுகையில், மாநிலத் தலைவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட அதிக சம்பளம் போல் தெரிகிறது” என்று தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு, 2012 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திட்டம், பக்காத்தான் தலைவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.