நேற்று இரவு மலேசியாவின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானிகளை அறிவிக்கும் மலேசிய அறிவியல் அகாடமியின் ( Academy of Sciences Malaysia) நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நஜிப், நாடு வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் வலுப்பெறாவிட்டால், அரசாங்கத்தால் மக்களின் பொதுநலன் மீது அக்கறை காட்ட இயலாது என்று தெரிவித்தார்.
மேலும் மலேசியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வலுவான இடத்தை அடைய வேண்டும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி, அதன் மூலம் சமூகத்தில் நிறைய மாற்றங்களையும், புதுமைகளையும் செய்ய முடியும். அவ்வாறு நடந்தால் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்றும் நஜிப் தெரிவித்தார்.
இவையனைத்தும் ஒரே நாளில் நடந்து விட முடியாது என்பதையும் தான் உணர்வதாகவும், ஆனால் இந்த வளர்சிக்குத் தேவையான திட்டங்களையும், எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனைகளையும் உடனடியாக முன்னிறுத்த வேண்டும் என்றும் நஜிப் கூறினார்.
மலேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்களான மலேசிய பாம் எண்ணெய் வாரியத்தின் இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் யூசோப் பாசிரான் மற்றும் தத்துவ அறிஞரான டாக்டர் சியா ஸ்வீ பிங் மற்றும் 19 புதிய உறுப்பினர்களுக்கும் தகுந்த அங்கீகாரம் அளித்தார்.