கோலாலம்பூர், டிச 18 – வீடு புரோடக்சன்ஸ் சார்பில் டெனிஸ் குமார் தயாரிப்பில், விமலா பெருமாள் இயக்கத்தில் புதிதாக வெளிவர இருக்கும் மலேசியத் திரைப்படம் ‘வெட்டி பசங்க’.
டெனிஸ் குமார், மகேந்திரன் ராமன், சங்கீதா கிருஷ்ணசாமி, டேவிட், ஆல்வின் மார்டின், சாஷ்டன் குரூப் ஆகிய உள்ளூர் திரை நட்சத்திரங்கள் நடிக்க, மிகவும் கலகலப்பான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் நேற்று மெகா மால் கோல்டன் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
இன்றைய இளைஞர்களில் பலர், வாழ்க்கையில் எந்த ஒரு பொறுப்பும் இன்றி, வேலைக்கும் போகாமல் வெட்டியாக நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு திரிவதையும், அதனால் அவர்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் என்னென்ன இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பதையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விமலா.
கதை மற்றும் நடிப்பு
முதல் பாதி முழுக்க கலகல திரைக்கதையோடும், இரண்டாம் பாதியில் காதலும், பிரிவும் என்று வழக்கமான தமிழ் சினிமா பாணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், வளர்ந்து வரும் மலேசிய சினிமாவிற்கு இந்த படம் புதிய முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
மலேசிய திரைப்படங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவர்கள் ரசித்து மகிழும் படியாக படம் நேர்த்தியான முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயகனாக டெனிஸ், கதாநாயகியாக சங்கீதா, முக்கியக் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன், டேவிட், ஆல்வின், சாஷ்டன் என்று அனைவரும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக டெனிஸின் தாய், தந்தையாக நடித்திருக்கும் மூத்த கலைஞர்களான தங்கமணி மற்றும் மலர்விழி ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.பெற்றோரின் பாசத்தையும், காதலின் பிரிவையும் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் படத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் அனைவரையும் கண்கலங்கச் செய்யும்.
சிறப்புத் தோற்றத்தில் மலேசிய நட்சத்திரங்கள்
இது தவிர, படத்தில் சிறப்பு தோற்றத்தில் டத்தோ கீதாஞ்சலி ஜி, ஜாஸ்மின், டி.ஹெச்.ஆர் ராகா உதயா, சைக்கோ மந்த்ரா, பெர்லிஜா, எஸ்.எஸ்.குமார், கலைச்செல்வி, ஜேசன், சதிஸ் ராவ், ரவிசங்கர், சொஜெஸ், அகோந்திரன், சிவகுமார், சசிதரன், ரெனீதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை மற்றும் பாடல் வரிகள்
படத்தின் இசையமைப்பாளராக டேடி சேக், பாடல்கள் திலீப் வர்மன், சைக்கோ மந்தரா, பாடல் வரிகள் யுவாஜி ஆகியோர் கூட்டணியில் வெட்டி பசங்க, என்னுயிரே, ஒரே சொல்லில் ஆகிய பாடல்கள் நெஞ்சை தொடுகின்றன.
20 திரையரங்குகளில் வெளியீடு
PECIPTA ( PERSIDANGAN DAN ESKPO CIPTAAN INSTITUSI PENGAJIAN TINGGI ANTARABANGSA) மற்றும் ICICM (International conference on informatics and creative media) ஆகியவற்றில் திரையிடப்பட்டு சில்வர் விருதுகளை வென்ற இத்திரைப்படம் வரும் ஜனவரி 2, 2014 ல் மலேசியா முழுவதும் 20 திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கிறது.
கதை, வசனம், காட்சிகள் என முழுவதும் மலேசிய சூழலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் மலேசிய மக்கள் அனைவரும் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று …
– பீனிக்ஸ்தாசன்