கோலாலம்பூர், ஏப்ரல் 14 – வீடு புரோடக்சன்ஸ் சார்பில் டெனிஸ் குமார் தயாரிப்பில், விமலா பெருமாள் இயக்கத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் வெளிவந்த ‘வெட்டி பசங்க’ மலேசியத் திரைப்படம் வசூல் ரீதியில் சாதனை படைத்துள்ளது.
நாடளவில் வெளியிடப்பட்ட அத்தனை திரையரங்குகளிலும் மக்கள் மிகவும் விரும்பி இத்திரைப்படத்தை பார்த்ததாக திரையரங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என நட்பு ஊடகங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ‘வெட்டி பசங்க’ படம் குறித்து நல்ல கருத்துகள் வெளியிடப்பட்டன.
மலேசியாவின் ‘Wajib Tayang’ திட்டத்தின் படி, இதுவரை வெளியிடப்பட்ட தமிழ் படங்களின் வசூல் ரீதியாக சாதனையாக கருதப்பட்ட 70,000.00 ரிங்கிட் என்ற கணக்கை ‘வெட்டி பசங்க’ திரைப்படம் முறியடித்து 400,000.00 ரிங்கிட் வசூலை ஈட்டியுள்ளதாக வீடு புரோடக்சன்ஸ் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘மலாய் மெயில்’ செய்தி நிறுவனம் இந்த வருடத்தின் பார்க்க வேண்டிய படங்களாக 13 மலேசியப் படங்களை பட்டியலிட்டு அதில் ‘வெட்டி பசங்க’ திரைப்படத்திற்கு இரண்டாவது இடத்தை அளித்துள்ளது.
அதே நேரத்தில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தற்போது ‘வெட்டி பசங்க’ திரைப்படம், மலேசியத் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ முதல் திரையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களிலேயே ஆஸ்ட்ரோ முதல் திரையில் ஒளிபரப்பப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘வெட்டி பசங்க’ என்ற பெருமையையும் இத்திரைப்படம் அடைவது குறிப்பிடத்தக்கது.
– ஃபீனிக்ஸ்தாசன்