மும்பை, ஏப்ரல் 14 – ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கோச்சடையான் படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன், இந்தி நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’.
இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு உருவான இந்த படம் அடுத்த மாதம் மே-9-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தின் இந்தி பதிப்பு டிரைலரை கடந்த வாரம் மும்பையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். இதில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், தீபிகா படுகோனே நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கோச்சடையான் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார். கோச்சடையான் படப்பிடிப்பில் சக நடிகர்கள் இல்லாமல் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.
இதன் காரணமாக என்னால் ரஜினிகாந்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், எனக்கு அவருடன் பேச 1½ நாள் கிடைத்தது. அவருடன் இருந்த அந்த நேரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ரஜினிகாந்தின் எளிமையையும், பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்து சென்றேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். முழுசக்தியையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவார். எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்பார். சவுந்தர்யாவை தனது மகள் என்று கருதாமல், இயக்குனராகவே பாவித்து, அவர் சொன்னதை எல்லாம் கேட்டார்.
தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய ஆண்டுகள் சினிமாவில் நடித்தபோதும் கூட சினிமா மீதான ரஜினிகாந்தின் ஈடுபாடும், ஆர்வமும் இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை.
அவரது எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை ரசிக்கிறேன். ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் ஈடுபாட்டுடன் முடிப்பார்கள் என நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.