Home இந்தியா ரஜினி, மோடி சந்திப்பால் விஜயகாந்த் அதிருப்தி!

ரஜினி, மோடி சந்திப்பால் விஜயகாந்த் அதிருப்தி!

659
0
SHARE
Ad

vijayakanthசென்னை, ஏப்ரல் 14 – நேற்று சென்னை வந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பினால், பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மோடி சென்னை வருவது பற்றியோ, ரஜினியை சந்தித்து பேச இருப்பது பற்றியோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஒருவர் கூட எந்த தகவலும் சொல்லாததே விஜயகாந்த் அதிருப்திக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மோடி சென்னை வர இருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வெளியானது. அந்த சமயத்தில் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மோடியும், ரஜினியும் சந்தித்து பேச உள்ளனர் என்ற தகவல் தெரிந்ததும் நம்மிடம் இதை ஏன் மறைக்கிறார்கள் என்று விஜயகாந்த் கூறியதாக தெரிகிறது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அவர் தன் பிரசாரத்தை முழுமையாக ரத்து செய்தார்.

அதோடு மோடியின் சென்னை பொதுக்கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். மேலும் மோடியை வரவேற்க அவர் தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் யாரையும் விமான நிலையத்துக்கு அனுப்பவில்லை.

மோடி – ரஜினி சந்திப்பு விவகாரம் விஜயகாந்திடம் மட்டுமின்றி அவரது கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. முக்கியம் அங்கம் வகிக்கிறது.

கூட்டணி கட்சிகளில் எங்கள் தலைவர் கேப்டன் மட்டுமே தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஒரு நடிகர் பின்னால் ஓடுகிறார்கள். இத்தனைக்கும் அவர் பா.ஜ.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை.” என்று தெரிவித்தார்.

விஜயகாந்தின் அதிருப்தி பற்றி தகவல் அறிந்ததும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், விஜயகாந்த்தை தொடர்பு கொண்டு பேசினார்கள். இதையடுத்து அவர் சற்று சமரசமானதாக தெரிகிறது.