டிசம்பர் 17 – பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு ஷியாட் இஸ்லாமிய போதனை முறைகளைப் பின்பற்றுகின்றார் என உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முகமட் சாபு முடிவெடுத்துள்ளார்.
தன் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவும் தனக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதற்காகவும் தனது வழக்கறிஞர்கள் சாஹிட் மீது வழக்கு பதிவு செய்வார்கள் என்று முகமட் சாபு அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக சாஹிட் கூறியுள்ள வாசகங்களை அவர் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் கடிதத்தை தனது வழக்கறிஞர்கள் முறையாக அனுப்புவார்கள் என்றும் அவ்வாறு அந்த வாசகங்கள் மீட்டுக் கொள்ளாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முகமட் சாபு “கெட்ட எண்ணத்தோடு என்னை அவமதிக்கும் வகையிலும், எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் சாஹிட் நடந்து கொண்டுள்ளார்” என்று கூறினார்.
மலேசிய அரசாங்கம் ஷியாட் இஸ்லாமிய போதனை முறைகளை நாட்டிற்கு ஒவ்வாதவை என தடை செய்துள்ளது. மலேசியாவின் பெரும்பான்மையான முஸ்லீம்கள் ‘சன்னி’ போதனை முறைகளை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சாஹிட் தனது அமைச்சு அதிகாரங்களுக்கு மீறி செயல்படுகின்றார் என்றும் முகமட் சாபு குற்றம் சாட்டியுள்ளார். தன் அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லாத ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறையின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்த சாஹிட் முற்படுகின்றார் என்றும் அவர் குறை கூறினார்.
இது அமைச்சரின் அதிகாரத்திற்கு மீறிய செயலாகும் என்றும் முகமட் சாபு கூறினார்.
சாஹிட் மீது காவல் துறையில் புகார் ஒன்றை தான் செய்யவிருப்பதாகவும் முகமட் சாபு கூறியுள்ளார்.