டிசம்பர் 18 – கூகுள் நிறுவனம் ஆண்டு தோறும் நடத்தும் இணையத் தள விற்பனைச் சந்தையில் இந்த முறை சுமார் 20 இலட்சம் பேர் பங்கெடுத்துள்ளனர். மின்சார சாதனங்கள், காலணிகள், கைக்கெடிகாரங்கள், பயணப் பதிவுகள் போன்றவற்றில் பயனீட்டாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கூகுள் தொடங்கிய இந்த விற்பனை சந்தையில் பங்கெடுத்தவர்கள் இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர்.
ஸ்னேப்டீல், இ-பே போன்ற மற்ற இணையத் தள விற்பனை மையங்களோடு இணைந்து கூகுள் இந்த விற்பனை சந்தையை நடத்தியது.
இந்த விற்பனை சந்தையில் கார்களும், வீடுகளும் விற்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக இந்தியாவின் டாட்டா வீடமைப்பு நிறுவனம் 55க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகளை இணையத் தளம் மூலம் விற்பனை செய்திருக்கின்றது.
இந்த இணையத் தள விற்பனை சந்தைகளில் உலாவியவர்களில் பாதிப் பேர் பெண்களாவர். மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி வரைதான் அதிகமான வருகையாளர்கள் பதிவு செய்தார்கள் என்றும் கூகுள் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் – அதாவது சுமார் 62 சதவீதத்தினர் – 18 முதல் 34 வயதுக்கும் உட்பட்டவர்களாவர்.
இந்த இணையத் தள விற்பனைச் சந்தையில் ஈடுபட்ட பல விற்பனை மையங்கள் தங்களின் விற்பனை சதவீதம் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொழில் நுட்பம் மக்களின் வாழ்க்கை முறைகளை எப்படியெல்லாம் மாற்றி வருகின்றது என்பதை உணர்த்துவதாக கூகுளின் இந்த இணையத் தள விற்பனைச் சந்தை அமைந்திருக்கின்றது.