இஸ்லாமாபாத், ஜன 3 – தேச துரோக குற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.பாகிஸ்தானில் கடந்த 1999ல் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கலைத்த பர்வேஷ் முஷாரப் ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார். 2008ல் பதவி விலகிய அவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். கடந்தாண்டு மார்ச் மாதம், மீண்டும் நாடு திரும்பிய முஷாரப், பொதுத் தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால், அது நிறைவேறவில்லை.
இதற்கிடையே, கடந்த 2007 நவம்பரில் அரசியலமப்பு சட்டத்தை மீறி பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியது, நீதிபதிகளை சிறை வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முஷாரப் மீது சுமத்தப்பட்டது.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முஷாரப்புக்கு ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனை வழங்கப்படும் என்பதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் விசாரணைக்கு ஆஜராக முஷாரப் நீதிமன்றத்துக்கு வர இருந்த வழியில், குண்டுவெடித்ததால் பாதுகாப்பு கருதி அவர் வரவில்லை.
இந்நிலையில், நேற்று முஷாரப் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராக இருந்தார். இதற்காக அவர் சென்ற போது வழியிலேயே திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து முஷாரப்பின் செய்தி தொடர்பாளர் ராசா போக்ஹரி கூறுகையில், முஷாரப் சுயநினைவுடன்தான் உள்ளார். உயிருக்கு ஆபத்து இல்லை. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.