இஸ்லாமாபாட்: பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷாரப்புக்கு, இன்று செவ்வாய்க்கிழமை தேசத்துரோக வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
பெர்ஷார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமட் சேட் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வில், பர்வேஷ் முஷாரப் மீது நீண்டகாலமாக வரையப்பட்ட உயர் தேசத்துரோக வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது துபாயில் உள்ள முஷாரப், அரசியலமைப்பை இடைநிறுத்தியதற்கும், 2007-இல் அவசரகால விதியை விதித்ததற்கும் தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். 2014-ஆம் ஆண்டில் அவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
76 வயதான முன்னாள் பாகிஸ்தான் இராணுவத் தலைவருமான அவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016-இல் துபாய் சென்றுவிட்ட நிலையில், பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி, நாடு திரும்பாதது குறிப்பிடத்தக்கது.