கராச்சி – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாராப் கடந்த சில வாரங்களாக தனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக இரகசியமாக துபாய் சென்றுள்ளார்.
ஆனால், அவருக்கு என்ன விதமான உடல் நலக் குறைவு என்பது குறித்து தகவல்கள் இல்லை.
ஒரு பச்சை நிற டி-சட்டையில் சாதாரணமாக நல்ல உடல் நிலையோடுதான் முஷாராப் பயணம் மேற்கொண்டார் என அந்தப் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
விமானம் புறப்படுவதற்கு வெகுநேரத்திற்கு முன்பே முஷாராப் வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு கிளம்பி விட்ட காரணத்தால், பத்திரிக்கையாளர்கள் அவரது பயணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விமான நிலையத்திலும், அவர் வழக்கமாக பயணிகள் செல்லும் பாதையில் செல்லாமல், விமானப் பணியாளர்கள் செல்லும் வாயிலின் வழி சென்றதால், யாரும் அவரை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
முஷாராப்புக்கு முன்பே அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் துபாய் சென்றடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
சில வழக்குகளின் காரணமாக, பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பாகிஸ்தான் உச்சமன்றம் அண்மையில் முஷாராப்புக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கமும் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியிருக்கின்றது.