கோலாலம்பூர், ஜனவரி 25 – நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு பெற்ற டத்தோ ரமணன் ம.இ.காவின் தலைமைப் பொருளாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தேசியத் தலைவர் பழனிவேல் அவரை விலக்க வேண்டும் என்ற நெருக்குதல்கள் கட்சி வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன.
பிரபல மனநல மருத்துவர் டாக்டர் மகாதேவனிடமிருந்து மோசடித்தனமாகப் பெற்ற 5.5 மில்லியன் ரிங்கிட் பணத்தை ரமணன் திரும்ப செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ரமணன் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட வேண்டுமென ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கும் அறைகூவல் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ம.இ.காவின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன், தேசியத் தலைவர் பழனிவேல் ரமணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
ரமணன் தலைமைப் பொருளாளராக கட்சியில் தொடர்வது கட்சிக்கும், அதன் தலைவர் பழனிவேலுவுக்கும், இந்திய சமுதாயத்திற்கும் பெரும் சேதங்களைக் கொண்டு வந்துள்ளது என்றும் மோகன் நேற்று தெரிவித்திருக்கின்றார்.
“நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ரமணன் மோசடிச் செயலைப் புரிந்துள்ளார் என்று தெரிகின்றது. இத்தகைய மோசடிச் செயலைப் புரிந்துள்ள ஒருவர் கட்சியின் தலைமைப் பொருளாளராகத் தொடர்வது கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும். பழனிவேல் அவரை உடனடியாக நீக்கவேண்டும்” என்றும் மோகன் ஃபிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளத்திடம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் நிதிகளையும், சொத்துக்களையும் கையாளுகின்ற கட்சியின் தலைமைப் பொருளாளர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும், மாறாக, மோசடிக் குற்றத்தைப் புரிந்தவராக இருக்கக் கூடாது என்றும் மோகன் வலியுறுத்தினார்.
மற்ற தலைவர்களும் கோரிக்கை
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த முன்னாள் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் மது மாரிமுத்துவும் நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்பாகவே ரமணன் இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டிருந்தார் என்ற வதந்திகள் உலவின என்றும் தற்போது அவரது நடவடிக்கையால் கட்சியின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார்.
ம.இ.கா இளைஞர் பகுதியின் சார்பாக புதிதாக மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.தர்மகுமாரன் தனது நெருக்குதலைக் காட்ட ரமணன் மரியாதையோடு பதவி விலகச் சொல்லி வலியுறுத்தும் முகநூல் (ஃபேஸ்புக்) பக்கம் ஒன்றைத் தொடக்கியுள்ளார்.
இப்படியாக எல்லா முனைகளில் இருந்தும் ரமணனை நீக்கும்படி பழனிவேலுவுக்கு நெருக்குதல்கள் வலுக்கத் தொடங்கியுள்ள வேளையில், எதிர்வரும் பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்று பழனிவேலுவும் அறிவித்திருக்கின்றார்.
ரமணன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த விவகாரம் பழனிவேலுவுக்கே எதிராகத் திரும்பும் சாத்தியங்கள் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.
ரமணனை பழனிவேலு நீக்காவிட்டால், அன்று சாமிவேலுவுக்கு எதிராக கேஸ் (GAS – Gerakan Anti-Samy Vellu) என்ற இயக்கம் தோற்றம் கண்டது போல், இப்போது பழனிவேலுவுக்கு எதிராக கேப் (GAP-Gerakan Anti-Palanivel) என்ற இயக்கம் உருவாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாக ஃபிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.