கோலாலம்பூர், பிப் 10 – இலங்கையின் பிரபல பத்திரிக்கையாளராக ‘இளநெஞ்சன்’ முர்ஷிதீனுடனான உரையோடு, கலந்துரையாடலையும் கொண்டிருந்த ‘செல்லியல் சந்திப்பு’ நிகழ்வு கடந்த பிப்ரவரி 4ஆம் நாள் தலைநகரில் சிறப்பாக நடந்தேறியது.
முன்னாள் துணையமைச்சரான டான்ஸ்ரீ க.குமரன் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், செல்லியல் வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா மலர் நூல்களை அவர் முர்ஷிதீனுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வை செல்லியலின் உதவி ஆசிரியர் பாரதி முனுசாமி அறிவிப்பாளராக மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
முர்ஷிதீன் அவர்களின் மலேசிய வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த தொழிலதிபர் தாஜுடின் வரவேற்புரையாற்றினார். இலங்கையில் முர்ஷிதீனைச் சந்தித்தது குறித்தும் அவரது வருகை ஏற்பாடுகள் குறித்தும் குறிப்பிட்ட தாஜூடின், நிகழ்வுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், செல்லியலில் உள்ள நவீன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து துணை ஆசிரியர் பீனிக்ஸ்தாசன் வருகையாளர்களுக்கு விளக்கமளித்தார்.
அவரைத் தொடர்ந்து, செல்லியல் குழுமத்தின் நிர்வாக ஆசிரியரான இரா.முத்தரசன், ‘முர்ஷீதீன் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில், அந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான முர்ஷீதீனின் பத்திரிக்கைத் துறை அனுபவங்கள் மற்றும் அவரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
தமிழ் ஆர்வலர்களையும், செல்லியல் வாசகர்களையும் சந்திக்கும் நோக்கத்திலும் அவர்களுடனான தமிழ் உறவை வளர்க்கும் நோக்கிலும் முக்கிய பிரமுகர்களை வைத்து இத்தகைய செல்லியல் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தின் முதல் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி மலர்வதாக முத்தரசன் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையிலான இத்தகைய இலக்கியச் சந்திப்புகள் மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளதாகவும், மலேசிய வாசகர்கள் இலங்கை இலக்கியங்களை தமிழ் நாட்டின் பிரபல பத்திரிக்கைகளின் வழியேதான் அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட முத்தரசன், இந்த நிலைமையை செல்லியல் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் நிவர்த்தி செய்யும் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் மூலம் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இலக்கிய உறவுகள் தொடர வேண்டும் என்றும் முத்தரசன் தனது உரையில் கூறினார்.
தலைமையுரையாற்றிய குமரன் இலங்கையுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் தமிழ் இன்று வரை நிலைத்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்தவர்களில் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பணி மறக்க முடியாதது என்றும் அவர் தனது உரையில் கூறினார்.
மேலும் இத்தகைய இலக்கிய சந்திப்புகளை செல்லியல் வளர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சிறப்புரையாற்றிய, இலங்கை பத்திரிக்கையாளர் முர்ஷீதீன், தனக்கு சிறுவயதில் எப்படி தமிழின் மீது ஆர்வம் வந்தது என்றும், அதற்கு காரணமாக அமைந்த சம்பவங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அத்துடன் தனது இத்தனை வருட பத்திரிக்கைத்துறை அனுபவங்களில் தான் சந்தித்த பல சவால்களையும், அதை எதிர்கொண்ட விதங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
அரசியல் பிரச்சனைகளால், இலங்கை பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், நெருக்குதல்கள் குறித்தும் குறிப்பிட்ட முர்ஷிதீன், தமிழ் இலக்கியம் இலங்கையில் எவ்வாறு வளர்க்கப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கினார்.
அவரது உரைக்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் முர்ஷிதீன் தனது விளக்கங்களை வழங்கினார்.
வருகை தந்த பிரமுகர்களுக்கு ஏற்பாட்டாளர் தாஜூதீன் நினைவுச் சின்னங்களை வழங்கினார்.