Home நாடு இன்னும் சில தினங்களில் தாயிப் ராஜினாமா – துன் அபாங் ஜொஹாரி அடுத்த முதல்வராகலாம்!

இன்னும் சில தினங்களில் தாயிப் ராஜினாமா – துன் அபாங் ஜொஹாரி அடுத்த முதல்வராகலாம்!

780
0
SHARE
Ad

Taib Mahmudகூச்சிங், பிப்ரவரி 10 – நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டின் ராஜினாமா இன்னும் சில தினங்களில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ராஜினாமா செய்வதற்கு முன்னால், தான் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கின்றது என்று தாயிப் தெரிவித்துள்ளார்.

அதில் ஒன்று சரவாக் மாநில ஆளுநர் துன் அபாங் முகமட் சாலாஹூடின் பாரியங் அவர்களைச் சந்தித்து பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் தனது முடிவை அவருக்குத் தெரிவிக்க வேண்டியதாகும் என்றும் தாயிப் கூறியுள்ளார்.

“நான் எல்லாவற்றையும் முறையாகவும் சரியான வரிசையிலும் நிறைவேற்ற வேண்டும்” என அவர். தான் சார்ந்துள்ள பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

இம்மாத இறுதியில் பதவி விலகுவீர்களா என பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது “இருக்கலாம். அப்போதுதான் பிப்ரவரி மாதத்தின் முழு சம்பளத்தை என்னால் பெற்றுக் கொள்ள முடியும்” என தாயிப் கிண்டலாகக் கூறினார்.

அடுத்த முதல்வர் யார்?

இதற்கிடையில், தாயிப்புக்குப் பதிலாக பார்ட்டி பெசாகா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ அமார் அபாங் ஜொஹாரி துன் ஓபெங் சரவாக் மாநிலத்தின் அடுத்த மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

அந்தக் கட்சியின் மற்றொரு துணைத் தலைவராக ஆல்பிரட் ஜாபு துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என முதலில் ஆரூடங்கள் எழுந்தாலும், அரசாங்க செய்தி நிறுவனமான பெர்னாமா  அடுத்த முதல்வராக நியமிக்கப்பட அபாங் ஜொஹாரியே பொருத்தமானவர் என்றும் அவருக்குத்தான் ஆதரவு பெருகி வருகின்றது என்றும் நேற்று முதல் ஆரூடங்களை வெளியிட்டு வருகின்றது.

இதனை வைத்துப் பார்க்கும்போது அபாங் ஜொஹாரியே அடுத்த முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.