இந்தியா, பிப்.14- உலக நாடுகளின் தண்டனையிலிருந்து இலங்கை அதிபர் ராஜபட்ச தப்பிக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியதைப் பற்றி ஏற்கெனவே ஆதாரங்களோடு விரிவாகக் கூறியுள்ளேன். தற்போது இலங்கையில் 367 ஹிந்து கோயில்களை இடித்துள்ளதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கோயில்கள் உள்பட அனைத்து நினைவுச் சின்னங்களையும் ஒழிப்பது என்கிற கொள்கை முடிவினை ராஜபட்ச அரசு எடுத்திருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, அந்த இடங்களில் சிங்களர் குடியிருப்புகளை ஏற்படுத்தும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 208 கோயில்கள் இதுவரை தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் அதிகமாக வாழும் திரிகோண மலைப்பகுதியில் 17 ஹிந்து கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளதாம். வவுனியா, மன்னார், அம்பாரை மாவட்டங்களில் பல கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் ஹிந்து கோயில்கள் இருந்தன என்பதற்கான அடையாளங்களே எதுவுமில்லை.
அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தின் மூலமாகவாவது விடிவு காலம் ஏற்படுமா என்பதுதான் நம்முடைய இன்றைய கவலையாகும்.
இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை வேறொரு நாட்டில் நடத்த வேண்டுமென நியூயார்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, காமன் வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக்கப் போவதாக கனடா போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன.
இந்தச் செய்திகள் எல்லாம் இலங்கை அதிபர் ராஜபட்ச அரசின் கொடுமைகளை உலக நாடுகள் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பதை உணர்த்துவதால், அது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது.
உலக நாடுகளும், உலக அமைப்புகளும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும், ராஜபட்ச அரசு புரிந்திருக்கும் வரலாறு காணாத போர்க் குற்றங்களையும் புரிந்து கொண்டு இலங்கை அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச அளவில் நடைபெறும் இந்த முயற்சிகளைப் புரிந்து கொண்டுதான், அவற்றை எப்படியாவது திசை திருப்பிட வேண்டுமென்ற தந்திரத்தோடு, மீண்டும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போகின்றனர் என்று இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், இலங்கைப் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபய ராஜபட்ச பேசியிருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபட்ச எப்படிப்பட்ட தந்திரங்களைக் கையாண்ட போதிலும், உலக நாடுகளின் கண்டனத்திலிருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பிவிட முடியாது என்பதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையாகும் என்று அவர் கூறியுள்ளார்.