நியூயார்க், பிப் 21 – அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இந்தியர் விற்ற லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசாக 425.3 மில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது.
அமெரிக்க லாட்டரி குலுக்கல் வரலாற்றின் இதுதான் அதிகபட்ச ஜாக்பாட் பரிசு என்பதால் அமெரிக்க ஊடக நிருபர்கள் இந்த அதிர்ஷ்ட சீட்டை விற்ற இந்தியரை பேட்டி காண்பதற்காக அவரது கடையை நோக்கி படையெடுத்தபடி உள்ளனர்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியரான குல்வீந்தர் சிங் என்பவர் வடக்கு கலிபோர்னியா நகரின் நெடுஞ்சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்.
அந்த பங்க்கையொட்டி சிறிய கடையும், உணவகமும் நடத்தி வரும் இவரது கடையில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு அமெரிக்க லாட்டரி குலுக்கல் வரலாற்றின் அதிகபட்ச ஜாக்பாட் தொகையான 425.3 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 ஆயிரத்து 640 கோடி ரூபாய்) பரிசு கிடைத்துள்ளது.
இந்த சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்னும் தெரியாவிட்டாலும், குல்வீந்தர் சிங்கின் கடையில் தான் விற்பனையானது என்பதையறிந்த அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள் அவரது கடையை சூழ்ந்து கொண்டனர்.
தனக்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டுள்ள விபரம் தெரியாத குல்வீந்தர் சிங் இந்த ஜாக்பாட் குலுக்கல் நடைபெற்ற நேற்றைய தினம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது, கலிபோர்னியாவிலிருந்து செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்ட அவரது மகன் பர்மீத் சிங் பரிசு பற்றிய தகவலை முதலில் தெரிவிக்கவில்லை.
‘உங்களுக்கு எதிர்பாராத விதமாக 10 லட்சம் டாலர் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று வேடிக்கையாக கேட்டார்.
தந்தையின் பதிலை தெரிந்து கொண்ட பின்னர் நமது கடையில் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இதன் மூலம் நமக்கு 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 6 கோடியே 21 லட்சம் ரூபாய்) கமிஷனாக கிடைக்கும் என்று மகன் கூறியதை கேட்ட குல்வீந்தர் சிங் ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்.