கோலாலம்பூர், பிப் 21 – டத்தோஸ்ரீ முகமட் நிஜார் ஜமாலுதீனை மந்திரி பெசார் பதவியிலிருந்து விலக்கியது குறித்து பேராக் சுல்தானுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியதற்காக ஜசெக தேசியத் தலைவர் கர்பால் சிங் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரங்களை கர்பால் நிரூபிக்க தவறிவிட்டார் என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கின் தண்டனை குறித்து வரும் மார்ச் 7 ஆம் தேதி அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி, கோலாலம்பூரிலுள்ள ஜாலான் புடு லாமாவில் , மதியம் 12.30 மணியளவில், பேராக் சுல்தானுக்கு எதிராக கர்பால் அவதூறு வார்த்தைகளை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றத்திற்கு சட்டப்பிரிவு 4(1)(b) ன் படி 5,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 3 வருட சிறை தண்டையோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.
இந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி, கர்பால் தன்னை தற்காத்து வாதத்தை முன்வைப்பதற்கு முன்பாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி அந்த முடிவை மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுபரிசீலனை செய்தது குறிப்பிடத்தக்கது.