ஜோர்ஜ் டவுன்: மறைந்த ஜசெக மூத்த தலைவரான கர்பல் சிங் பினாங்கு மாநில அரசிடமிருந்து டத்தோஸ்ரீ உத்தாமா விருதைப் பெற உள்ளார்.
இது குறித்து ஜசெக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“உங்கள் தியாகம் மறக்கப்படாது, போராட்டம் தொடர்ந்து தீவிரமடையும்,” என்று அந்த இடுகை கூறியுள்ளது.
கர்பால் முதன் முதலில் 1974- ஆம் ஆண்டில் அலோர் ஸ்டார் பண்டாரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு, பினாங்கில், ஜெலுத்தோங் (1978-1999) மற்றும் புக்கிட் குளுகோர் (2004-2014) ஆகிய தொகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டின் மிக முக்கியமான குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவராகப் பாராட்டப்பட்ட கர்பால், அச்சமற்ற தன்மை, நேர்மை மற்றும் பல இன, மதச்சார்பற்ற மலேசியாவுக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்டார்.
2005- ஆம் ஆண்டில், வாகனம் ஒன்று மோதியதில் கர்பால் பலத்த காயம் அடைந்ததில் அவர் சக்கர நாற்காலி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மற்றொரு சாலை விபத்துக்குப் பிறகு அவர் 2014 அன்று மரணமைடந்தார்.
“எனது தந்தை எப்போதுமே அரசியலில் தீவிரமாக இருந்தபோது பட்டங்களை ஏற்க மாட்டார் என்று கூறியிருந்தாலும், மரணத்திற்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் பினாங்குக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளுக்கு தகுதியானது என்று நான் உணர்கிறேன்” என்று ராம்கர்பால் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.
“பினாங்கு ஆளுநரிடமிருந்து எனது தந்தையின் சார்பாக இந்த விருதைப் பெறுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.