கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நாட்டின் கல்வியின் தரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது தற்போதைய தேவைகளுக்கு இசைவானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் 2021 வரவு செலவுத் திட்டத்தை இன்று மக்களவையில் விவாதித்து, அதனை அவர் நிராகரிப்பார் என்று கூறினார்.
இளைஞர்களுக்கு போதிக்கப்படும் கல்வியானது அறிவியல் மற்றும் கணித யுகத்திற்கு ஏற்ப இல்லை என்பதை மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
“முஸ்லிம்கள் தங்கள் மதத்தை அறிந்திருக்க வேண்டும். ஆனால், உலக அறிவுடன் நம்மை தயார்படுத்திக் கொள்வதும் கடமையாகும்” என்று அவர் கூறினார்.
இஸ்லாத்தைப் படிக்க ஒதுக்கப்பட்ட நேரமும் இதேபோல் மற்ற பாடங்களைக் கற்றுக்கொள்ள செலவிடப்பட வேண்டும் என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் கணிதம் குறித்த அறிவு நிலையானது அல்ல என்றும், ஆங்கிலத்தில் இருப்பதை, மலாய் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்கள் அறிவியல், மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிபுணர்களாக இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
“நமக்கு அத்தகைய மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை,” என்று மகாதீர் கூறினார்.
கல்வியை தற்போதைய காலத்திற்கு ஏற்புடையதாக வைத்திருக்க, வரவு செலவுத் திட்டத்தில் எந்த திட்டமும் இல்லை என்றும், இதன் காரணமாக கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டத்தை தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.