கோலாலம்பூர், மார்ச் 29 – தனக்கு எதிராக தேச நிந்தனை சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், மேல்முறையீடு முடியும் வரை ஜசெக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கர்ப்பால் சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து கர்ப்பால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது இருக்கும் சூழ்நிலையின் படி, என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளேன். எனவே என்னுடைய ஜசெக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை பொதுவில் அறிவிக்கிறேன். இதற்கிடையில் ஜசெக துணைத் தலைவர் டான் கோக் வாய் தலைவராகப் பொறுப்பேற்பார் ” என்று தெரிவித்துள்ளார்.
சங்கப் பதிவிலாகாவில் தன்னுடைய பதவியை தக்க வத்துக்கொள்ள அனுமதி கேட்டு தன்னை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் கர்ப்பால் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, பேராக் மந்திரி பெசார் முகமட் நிஸார் ஜமாலுடினை பதவி நீக்கியதற்கு அம்மாநில சுல்தானுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டார் என கர்ப்பால் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.