சென்னை, மார்ச் 29 – ஓட்டு போட பணம் கொடுப்பது பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல் டி.ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,
நாடாளுமன்றத் தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து வருகிறது.
இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் பெயர், முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும். வருமானவரி சட்டத்தின் கீழ் தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.
தகவல் தருபவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 6669 என்ற எண்ணிலும், பேக்ஸ் எண் 044- 282 536 59 மற்றும் இ.மெயில் itcontrolroomchennai@gmail.com என்ற முகவரியிலும் தகவல் தரலாம்.
முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிகளின்படியோ அல்லது வருமானவரி சட்டத்தின்படியோ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.